கடிதம் 78
எரிகிற தழலில்...!
- தேர்தலுக்கு நேரு வருகை—அரியலூர் விபத்து—பெரியாரும் காமராஜரும்.
தம்பி!
நேரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும் பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார்.
“கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே! இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும் செய்தியை; நான் நிலைமையை எடுத்துக்கூறி, நமது நேரு பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத் துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும் அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு? துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!” என்று, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக் காமராஜர் கூறிவிட்டார்!!
எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான்—அதற்குக் காரணம் இரண்டு.