215
சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே, மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர் இரயில் விபத்து நேரிட்டது—சர்க்கார் கணக்களித்துள்துள்ளனர் 152 பிணங்களைக் கண்டெடுத்தோம் என்று—மற்றப்படி, கூழாகிப்போன உடலங்கள் ஏராளம்! குவியலாகக் கொட்டிக் கொளுத்தியே விட்டார்களாமே!! தொலைவிலே நின்றுகொண்டு, தீ மூண்டு எழுந்தது கண்டு ஐயோ! என் மகன்! அப்பா! என் தாய்! ஐயயோ! என் கணவன்! ஐயகோ! எனதருமை மனைவி! என் அண்ணன்! என் தம்பி! என்றெல்லாம் கதறினராம், சென்றவர்கள் பிணமாகக்கூடத் தம்மிடம் ஒப்படைக்கப்படாத நிலைபெற்ற துர்ப்பாக்கியவான்கள்!! ஆற்றிலே மூழ்கி, இறந்து, உடலை, மீனினங்கள் கொத்திக் கெடுத்துவிட்ட நிலையிலும், அழுகிப்போன நிலையிலும், பல சடலங்களை ஆங்காங்கே கண்டெடுத்தனர்! இதுபோன்றதோர் கோரமான விபத்து நேரிட்டதில்லை என்று உயர் நிலையில் உள்ளவர்களே ஒப்புக் கொள்கின்றனர். விபத்து நடந்த இடத்தருகே செல்லவே முடியவில்லை. அவ்வளவு கோர நிலைமை என்கின்றனர் ‘கனம்’கள்.
அப்போது, அரியலூர் வருவார்! ஆறுதல் அளிப்பார்! விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டிப்பார்! விழியைத் துடைத்துக் கொள்ளுங்கள், மனம் உடையும் துக்கம் நேரிடும் போதுதான், மகத்தான மனோதிடம் காட்டவேண்டும்! என் அனுதாபம் உங்கட்குத்துணை நிற்கும்!!—என்றெல்லாம் நேரு பண்டிதர் பேசுவார்; கேட்டு மக்கள் தமக்கு வந்துற்ற அவதியையும் ஓரளவுக்கு மறந்து, நமது முடிசூடா மன்னர், நமது குடும்பப் பெரியவர் போன்றவர், எத்துணை மனம் உருகிப்போயிருக்கிறார், நாம் அடைந்துள்ள அவதி கண்டு அவர் ஆறாத்துயரம் அடைந்துள்ளார், அவர் கூறுவது போல, நமக்கு இப்படிப்பட்ட சமயத்திலேதான் மனதிடம் வேண்டும், ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ! என்ன செய்வது, தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியும் எண்ணியும் மனதுக்கு ஓர் சாந்தி தேடிக் கொண்டிருந்திருக்கக்கூடும்—இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தனர்.
நேரு பண்டிதரே நேரடியாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு வருகிறார் என்ற உடன், அந்த வட்டாரத்து அதிகாரிகள் குழாமே அலறிப்புடைத்துக் கொண்டு நிவாரண வேலையை மும்முரமாக்கி இருக்கும். நீயும் நானும் சென்றிருந்தால், என்ன நடைபெறும்! கதறுவோருடன் கூடி நாமும் அழுதிருப்போம்! ஐயய்யோ எனும் ஓலம் கேட்டு நாமும் துடித்-