பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

திருப்போம். நேரு பண்டிதர் வந்திருந்தால் நிலைமையில் நிச்சயமாக ஓர் மாற்றம் தெரியும், ஆட்சித் தலைவருக்கு நம் மக்களிடம் எத்துணை அன்பு இருக்கிறது என்று தெரிந்திருக்கும். ஆனால், நேரு பண்டிதர் அரியலூர் வரவில்லை! பிணமலையும் இரத்த வெள்ளமும் கண்டு தமிழகம் துடிதுடித்து அழுதபோது ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் இங்கு வரவில்லை. தாலி இழந்த தாய்மார்கள், மகனை இழந்த மாதாக்கள், கதறினர், அம்மையே! அழாதே! வந்துற்ற விபத்து வேதனை தருவதுதான், எனினும், என் செய்வது, தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! என்று தைரியம் பேசிட, ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் வரவில்லை.

அரியலூர் விபத்தின்போது வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்க மட்டும் ஓடோடி வருகிறாராம்!

வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்!—என்று பொறுப்பை மறவாத, மனிதாபிமானத்தை இழந்திடாத காங்கிரஸ் நண்பர்கள் கூறிக் குமுறுவது தெரிகிறது, தம்பி. ஆனால் நேரு பண்டிதருடைய உள்ளப்பாங்கு எப்படி இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தாயா? எத்துணை அலட்சியம் இருந்தால், எந்த அளவுக்கு பந்த பாசம் இல்லாதிருந்தால், இங்கு 152 பிணம் கண்டெடுத்தோம் என்று சர்க்காரே கணக்குக் கொடுத்தனர், மற்ற உருவங்கள் உடலங்களாகக்கூட இல்லை, தலைவேறு உடல் வேறு, கால் வேறு கரம் வேறு என்று ஆகிவிட்டன, ஆகவே அடையாளம் கண்டறியவும் முடியவில்லை, இத்தனை பேர் என்று கணக்கு எடுக்கவும் இயலவில்லை என்றுகூறி, குழி வெட்டி அதிலே போட்டு மொத்தமாகக் கொளுத்திவிட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்; காணச் சகிக்காத காட்சியாக இருக்கிறதே. கண்றாவிக் கோலமாக இருக்கிறதே என்று பத்திரிகைகள் எடுத்துக்காட்டின; இவ்வளவுக்குப் பிறகும், நேரு பண்டிதருடைய உடல் ஆடவில்லை, அசையவில்லை, ஓடோடிச் சென்று, அந்த மக்கள் மத்தியில் நின்று, மாரடித்து அழும் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்போம் என்று இரக்கம் எழவில்லை! இப்போது வருகிறாராம், எல்லோரும் காங்கிரசுக்கே ஓட்டு அளியுங்கள்! என்று உத்தரவு பிறப்பிக்க! ஒரு வேளை, மக்களைப் பார்த்து அந்த மகானுபாவர் கோபித்துக் கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை; “மக்களே! என்ன உங்கள் புத்தி வரவர இப்படிக் கெட்டுப் போகிறது! எதற்காக இரயிலைக் கவிழவிட்டீர்கள்! அதனாலே இரயில்வே இலாகாவுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். அதுதான் போகட்டும் என்றால், எவ்வளவு பேர் செத்துவிட்டார்கள்—அதனால்