பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

வருவது இல்லை. வரவேண்டும்—ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற பாசம் எழுவதில்லை; டில்லியிலேயே நமது வல்லத்தரசுதான் குழந்தைபோலத் தேம்பித் தேம்பி அழுதார் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன; நேரு பண்டிதருக்கு ஏற்பட்ட வருத்தமெல்லாம் தமது ஆருயிர்த்தோழர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தக் காரணத்துக்காக மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டாரே என்பதுதான்.

நேரு பண்டிதரின் இதயம் ரொம்ப மென்மையானது—அவரால் அவதியை, அழுகுரலைச் சந்திக்க முடியாது—விபத்து, வேதனை என்றால் அவரால் காணச் சகிக்காது—அதனாலேதான் அவர், தமிழகத்தில் புயலும் வெள்ளமும் புகுந்து அழிவு ஏற்படுத்திய நேரத்திலும், இப்போது அரியலூர் இரயில் விபத்தால் பயங்கர நாசம் ஏற்பட்ட நேரத்திலும், நேரடியாக வந்து ஆறுதல் கூறவில்லை. அறிமின்! அறிவிலிகாள்! இதைக் காட்டிக் கரிபூசாதீர்! துரும்பைத் தூணாக்காதீர்! என்று வாதாடும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உண்மையா அது என்று பார்த்தால், அல்ல, அல்ல, என்று விளக்கமாகத் தெரிகிறது.

வடக்கே எங்கு எவ்விதமான விபத்து நேரிட்டுவிட்டாலும், நேரு பண்டிதர், உடனே பறந்து சென்று, பாசமும் நேசமும் காட்டுகிறார்; அன்பும் ஆறுதலும் பொழிகிறார்; இதனை இல்லை என்று எவ்வளவு துணிவு பெற்ற காங்கிரஸ் காரரும் சொல்லிவிட முடியாது. :கோசி நதியால் வெள்ள விபத்து

கட்சு பூகம்ப விபத்து
அசாமில் வெள்ள விபத்து
உத்தரப்பிரதேசத்தில் வெள்ள விபத்து

இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் நேரு பண்டிதர் சென்றதும், ஜீப்பிலும் விமானத்திலும் பயணம் செய்து, மக்கள் மத்தியில் நடமாடி ஆறுதல் அளித்ததும், காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியும்.

அங்கெல்லாம் அவதி நேரிட்டபோது, ஓடோடிச் சென்று உருக்கம் காட்டிய நேரு பண்டிதர், தமிழகத்திலே அழிவு நேரிட்டு, மக்கள் கதறும்போது மட்டும், நேரில் சென்று துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆறுதல் கூறிச் சோகத்தைத் துடைக்கவேண்டும் என்று எண்ணவில்லை. அந்த எண்ணம் இயல்பாக எழாத காரணம் என்ன? ஏன்