பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

219

அந்த மனம் வடக்கே காணப்படும் விபத்துகளின்போது அனலிடு மெழுகாகிறது, தமிழகம் தலைவிரிகோலமாகும்போது மட்டும், பாறையாகிவிடுகிறது? இந்த விசித்திரமான போக்குக்குக் காரணம் என்ன? நாம் கூறும்போது பலருக்குக் கோபம்கூட இருக்கிறது. கவைக்கு உதவாத காட்டு மிராண்டிக் கருத்தென்று ஏசக்கூடச் செய்கிறார்கள். எனினும், இத்தகைய சம்பவங்களின் போதாவது, சிறிதேனும் ஆழச் சிந்திப்பார்களானால், சீற்றமடையும் நண்பர்கள், நாம் வலியுறுத்தி வரும் உண்மையை உணருவார்கள்—வடக்கு வேறுதான்—தெற்கு வேறுதான்!!

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே—அது தமிழகத்தில் விபத்து நேரிடும்போது நேரு பண்டிதருக்கு ஏற்படுவது இல்லை.

ஆனந்த விகடனுக்கே இது ஆச்சரியத்தை மூட்டி விட்டிருக்கிறது; சிறிது ஆயாசமும் எழுத்திலே தொனிக்கிறது; எண்ணத்தில் மட்டும் நாம் கூறிவரும் உண்மை இடம் பெற மறுக்கிறது! எனினும் ஆச்சரியத்தையேனும் தந்திருக்கிறதே என்று எனக்கு ஓரளவு திருப்திதான். தம்பி! நேரு பண்டிதருடைய இந்தப் போக்கு விகடனுக்கு விசாரம் தருகிறது.

“நமது பிரதம மந்திரி நேருஜீ, அரியலூர் விபத்து நடந்தவுடனேயே ஒரு நிபுணர் கோஷ்டியுடன்கூட, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம், அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோசி நதியில் வெள்ளம் வந்து சேதம் விளைவித்தபோது, அவர் அந்தப் பிரதேசங்கள்மீது பறந்து பார்வையிட்டார். கட்சில் பூகம்பம் நாசம் விளைவித்தபோதும், அசாமிலும் உத்திரப்பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்ட போதும், அவர் அங்கெல்லாம் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார். இதனால் கஷ்டப்படும் மக்களுக்கு ஆறுதல் பெற முடிந்ததோடு நிவாரண வேலைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்,உடனடியாக நடப்பது சாத்தியமாயிற்று”

இவ்விதம் ஆனந்த விகடனே எழுத நேரிடுகிறது.

அரியலூர் விபத்து, நேரு பண்டிதரை இங்கு வரவழைக்கவில்லை; ஆனால் தேர்தல் ஆபத்து அவரை இங்கு ஓடோடி வரச் செய்கிறது.

அரியலூர் விபத்தின்போது நேரு பண்டிதரை, இங்கு வரச்சொல்லி அழைத்து, தமிழ் மக்களின் துயரத்தைக்