பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

கண்ணாலே பாருங்கள், என்று காட்டிட காமராஜருக்கு எண்ணம் எழவில்லை, தேர்தல் ஆபத்து என்ற உடன், வாருங்கள்! ஓட்டு வரம் தாருங்கள்!—என்று ஏத்தி ஏத்தித் தொழுது, நேருபண்டிதரை இங்கு அழைத்து வரவேண்டும் என்ற அவசியம் காமராஜருக்குச் சுரக்கிறது.

தம்பி! என் துக்கத்துக்கு மற்றோர் காரணம் என்ன தெரியுமா? இங்கு, காமராஜரையும் அவருடைய கூட்டாளிகளையும் இந்தத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்வதே இப்போதைக்கு அவசரமான அவசியமான கடமை என்று என்று கூறி, உள்ளன்புடன் பெரியார் பாடுபடுகிறார்—அவருடைய இன்றைய நண்பர்களோ, அந்த நோக்கத்துடன், தீனாமூனாகானாக்களுடைய பெட்டியிலே, ஒரு ஓட்டு கூடப் போடக்கூடாது, மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறும் அளவுக்குப் பிரசார இயந்திரத்தை முடுக்கிவிடுகிறார்கள்—காமராஜரின் யோக்யதை என்ன, உன் யோக்யதை என்ன! அட பாவி! அவரைப் போய் எதிர்க்கக் கிளம்புகிறாயே!—என்று மனம் நொந்து பேசுகிறார்கள். காமராஜர் பக்கம் அணிவகுத்து நிற்கிறார்கள்!

இருந்தும், பார் தம்பி! காமராஜர், நேரு பண்டிதரைத்தான் அழைத்து வருகிறார், தமிழகத் தேர்தல் பிரசாரத்துக்காக!!

சென்ற பொதுத்தேர்தலின்போது, பெரியார், காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காகப் பெரும்பணியாற்றினார். அப்போது அவருடைய பலமான எதிர்ப்பைச் சமாளிக்க, நேருபண்டிதர் தேவைப்பட்டார்; வரவழைக்கப்பட்டார். இப்போதுதான், பெரியாரின் பேராதரவு காமராஜருக்குக் கிடைத்திருக்கிறதே. நேரு பண்டிதர் வந்திருந்து உதவிசெய்ய வேண்டிய அவசியம் என்ன?

முன்பு இருந்ததைவிடத் தமிழகத்தில் காங்கிரசுக்குச் செல்வாக்கு அமோகமாகிவிட்டது; காமராஜரின் வீரமும் தீரமும் வேலைப்பாடும் மிகுந்த நன்மை தரும் திட்டங்களின் காரணமாக, எதிர்ப்புகள் பட்டுப்போயின, புது உறவுகள் பூத்துக் காய்க்கின்றன என்கிறார்கள்—எதிர்த்து நிற்கும் நாமோ, அற்பர்கள், அலட்சியப்படுத்தத் தக்கவர்கள் என்கிறார்கள்; இந்த நிலையில் காமராஜர் ஏன், நேரு பண்டிதரை வரவழைக்கிறார்!

பெரியார் எனக்காகப் பிரசாரம் செய்கிறார்—செய்யட்டும்—ஆனால் அது போதாது—காங்கிரசுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், பாரெல்லாம் புகழ் பெற்ற பஞ்சசீலப்