221
பண்டிதர், நேரு, வரவேண்டும்—அப்போதுதான் இலட்சக் கணக்கிலே மக்கள் கூடுவர், கொண்டாடுவர், அப்போதுதான் ஓட்டுகள் குவியும் என்று அல்லவா, காமராஜர் எண்ணுவதாகத் தெரிகிறது!! இது எனக்கு ஏற்பட்டுள்ள, துக்கத்துக்கு உள்ள இரண்டாவது காரணம்.
பெரியாரின் பேரன்பர்கள் இதற்கெல்லாமா மனம் உடைந்து போவார்கள்! என்ன ஆணவம் இந்தக் காமராஜருக்கு! நமது பெரியாரின் பேராதரவு இடைவிடாது கிடைத்திருக்கும்போது, இந்தக் கண்ணீர்த் துளிகளையும் கம்யூனிஸ்டுகளையும், பிரஜாக்களையும், சோஷியலிஸ்டுகளையும், உதிரிகளையும் பூண்டோடு ஒழித்துக்கட்டிவிட்டு, பிறகு திராவிட நாடு பெறுவதுபோன்ற வேலையில் ஈடுபடுவோம் என்று சூள் உரைத்து விட்டு, சுறுசுறுப்புடன், விறுவிறுப்புடன் நாம் பணியாற்றி வருகிறதைக் கண்ணாலே கண்டான பிறகு, இந்தக் காமராஜர் தேர்தல் பிரசாரத்துக்காக, நேரு பண்டிதரை வரவழைக்கிறேன் என்று அறிவிக்கிறாரே! இது தகுமா? முறையா? தேவையா? நம்மைப்பற்றி அவர் இவ்வளவு தாழ்வாகவா கருதுவது! என்றெல்லாம் எண்ணவா போகிறார்கள்!! நான் அப்படி நினைக்கவில்லை. இந்த ராஜகோபாலாச்சாரியார் என்ன இப்படிக் கெட்டுவிட்டாரே! ராமசாமிப் பெரியாரின் தரத்துக்கு வந்துவிட்டாரே! என்று காமராஜர் கேவலப்படுத்திப் பேசியதைக் கேட்டே சகித்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் கோபம் கொள்ளப்போகிறார்கள்!
“நல்ல பிரபலமான சர்ஜனை வரவழைத்துக் காட்டப் போகிறேன்” என்று கூறுவது கேட்டால், அதுவரை வைத்தியம் பார்த்து வந்த டாக்டருக்குக் கோபம் வரும்—தன்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று மன வேதனை ஏற்படும். காமராஜரோ துணிந்து நானொன்றும் பெரியாரை நம்பிக்கொண்டில்லை, பெரியாரின் பிரசாரம் போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டில்லை, பெரியாரின் துணை தேர்தலில் வெற்றி தந்துவிடும் என்று சும்மா இருந்து விடமாட்டேன். நான், என் நேருவை வரவழைக்கிறேன் என்று சொல்லுகிறார்.
இந்த அவருடைய மனப்பான்மை எனக்குத் துக்கத்தைத் தருகிறது.
எப்படியோ ஒன்று, நேரு பண்டிதர் வருகிறார், தேர்தல் பிரசாரம் செய்ய—அரியலூர் விபத்தின் போது தமிழகத்தை அலட்சியப்படுத்தியவர். புயல் வெள்ளக் கொடுமையின்-