222
போது தமிழகத்தை எட்டிப் பார்த்திட மனமற்று இருந்தவர், தேர்தலுக்காகத் தமிழ்நாடு வருகிறார்! வரட்டும்! தமது செல்வாக்கை வழங்கட்டும்! ஈளைகட்டி இருமிக்கொண்டிருக்கும் நோயாளியைப் பிழைக்க வைக்கட்டும்—தம்பி—எனக்கு அது பற்றித் துளியும் கவலை இல்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள், தமிழ் நாட்டை எவ்வளவு உதாசீனப்படுத்துகிறார்கள், எத்துணை அலட்சியம் காட்டப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டப் படுவதாக அமையும் போதுதான் வேதனை குடைகிறது!
ஒவ்வொரு முனையிலும் இந்த நிலை காண்கிறோம்—ஒவ்வொரு முனையிலும், இந்தப் போக்கினாலே கஷ்ட நஷ்டம் அடைபவர்கள், மனம் குமுறுகிறார்கள்; சில வேளைகளிலே கண்டனத்தைக் கூட வெளியிடுகிறார்கள்—ஆனால், தொடர்ந்து நடைபெறும் இந்த ஓரவஞ்சனையை—மாற்றாந்தாய் மனப்பான்மையை—மாற்றிடப் பொதுவான, பலமான, முயற்சி எடுத்திட முன்வருவதில்லை! ஆபத்தின்போது அவரவர்கள் தத்தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று இருந்து விடுவதுபோல, நம் வரையில் சலுகை கிடைத்து விட்டால் போதும், ஊர்த் தொல்லையைத் தூக்கி நாம் நம் தோளில் போட்டுக் கொள்வானேன் என்று இருந்து விடுகிறார்கள். இந்தப் போக்குத் தெரிகிறது பண்டிதருக்கு; எனவேதான் அவர் அரியலூர் விபத்தின்போது கண்ணீரைத் துடைக்க இங்கு வரவில்லை, ஓட்டுகளைத் தட்டிப் பறித்திடமட்டும் வர இருக்கிறார்.
இவருடைய இந்தப் போக்கு நியாயமா? இவர் ஈவு இரக்கம், மனிதாபிமானம், மக்களாட்சிக்குத் தேவையான கடமை உணர்ச்சி ஆகிய தூய்மைகொண்ட உள்ளத்தினர்தானா என்றெல்லாம் ஆராய்வதற்காக நான் இதனை விளக்கினேன் இல்லை! நமது நாட்டுக்குத் தரப்படும் நிலையைப்பற்றி, நாட்டுப்பற்றுக் கொண்டோரனைவரும் எண்ணிப் பார்த்திட வேண்டும் என்பதற்காகவே, இதனை விரிவாகக் கூறினேன்.
தமிழ்நாடு, இந்தத் தாழ்நிலைக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டிடும் நிகழ்ச்சிகள் பலப்பல. அதில் இது ஒன்று.
தமிழகம் தவித்தபோது இங்கு வராத நேருபண்டிதர், ஓட்டுக் கேட்கமட்டும் வருகிறார், என்பது வேதனை தருகிறது; அதுபோலவே காங்கிரசுக்கு ஓட்டு அளிக்கும்படி மக்களிடம் பேசிட, தமிழகத்துக்குத்தான் நேரு வருகிறாரே தவிர, வங்கத்துக்குக் காமராஜர் போகிறார் இல்லை, பாஞ்சாலத்துக்கு பக்தவத்சலம் பறக்கிறார் என்று இல்லை, இது வெட்கமும்