223
வேதனையும் தருகிற நிலைமையாகும். ஆனால் இரண்டு என்ன—எத்தனையையும் ஏற்றுக்கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க இங்கு காங்கிரஸ் கனவான்கள், தயாராக இருக்கிறார்கள்.
தேவிகுளம்
பீர்மேடு
நெய்யாற்றங்கரை
கொச்சின்—சித்தூர்
பாலக்காட்டுத் தமிழ்ப் பகுதி
தமிழருக்கு இல்லை! என்று டில்லி உத்தரவு பிறப்பித்தது—ஐயனே!—மெய்யனே! இதோ பாரும் புள்ளி விவரம்! இந்தப் பகுதி எல்லாம் தமிழருக்கே உரியது என்பது விளங்கும் என்று ‘இருந்து முகந்திருத்திக்’ கூறினர்; “என்னிடம் புள்ளி விவரம் காட்டவா துணிகிறீர்கள்!” என்று நேரு பண்டிதர் உருட்டுவிழி காட்டினார். “எமை ஆளும் கோவே! பிழை பொறுத்திடுக! பெருங்கோபம் விடுத்திடுக! குளமாவது மேடாவது! குணாளா! உன் குளிர்மதிப் பார்வைபோதும் எமக்கு! தேவிகுளம் போனாலென்ன, தேவதேவா! உன் திருப்பார்வை பட்டால் போதாதா! அந்தப் பகுதி அனைத்தும் அளித்து விடுகிறோம். அதுமட்டுமல்ல, எமை ஆளாக்கிவிட்ட ஆற்றலரசே! செங்கோட்டையில் ஒரு பாதியையும் தருகிறோம், பெற்றுக்கொள்க!”—என்று கூறிவிட்டு வந்தவர்களல்லவா கோலோச்சுகிறார்கள்.
இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்கிற பண்டார நாயகாவின் ஆட்சியின் போக்குப்பற்றி, ஒருதுளியும் டில்லி நடவடிக்கை எடுத்ததில்லை—சிறிதளவு அதட்டிக் கேட்கலாகாதா, அவனி புகழ ஒரு காலத்தில் வாழ்ந்த இனமாயிற்றே எமது தமிழர், சிங்களத்தை எமது மன்னன் வென்று, அந்தப் போரிலே பிடிபட்ட சிங்களவர்களைக்கொண்டு, காவிரிக்குக் கரை அமைத்தான் என்று கல்லில் பொறித்திருக்கிறார்களே! அத்தகைய வீரமரபினர், இன்று ஓட்டாண்டிகளாக மட்டுமல்ல, நாடற்றவர்களாக ஆக்கப்படுகிறார்களே, கள்ளத்தோணிகள் என்று கேவலப்படுத்தப்படுகிறார்களே—இதற்குப் பரிகாரம் காண ஒரு சிறு முயற்சி எடுத்திட வேண்டாமா?—பாதகம் விளைவிக்கும் பண்டார் நாயகாவின் ஆட்சிக்கு நல்லறிவு கொளுத்த வேண்டாமா? என்று கேட்டனரோ நமது மந்திரிமார்! இல்லை! கேட்டால்,