224
மந்திரி பதவி நிலைக்காதே என்ற மருட்சியால், வாய் அடைத்துக் கிடந்தனர்!
ஒவ்வோர் சமயத்திலும் இதே போக்குத்தானே கண்டோம். மனம் குமுறிப் பேசினர் பலரும். எனினும் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை; ஒவ்வொரு துறையிலும் டில்லி ஆதிக்க உணாச்சியையும், தமிழரின் நியாயமான ‘கோரிக்கைகளை’க் கூட அலட்சியப்படுத்தும் போக்கையும் காட்டிக்கொண்டேதான் வருகிறது.
சென்னை மந்திரிமார்களிலேயே மார்தட்டிப் பேசுவதில் முதல் தாம்பூலம் பெற்றவர், நிதி அமைச்சர்.
நமது கழகப் பெயர் கேட்டாலே அவர் நெரித்த புருவத்தினராகிறார்.
நமது கழகத்தைத் தாக்கிப் பேசக் கிளம்பினாலோ, பற்களை நறநறவெனக் கடிக்கிறார்.
அப்படிப்பட்ட ‘வீரதீரமிக்கவர்’ இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் துறையிலே பின்தங்கி இருக்கும் சென்னைக்கு முதல் ஐந்தாண்டு திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டுப்போன சென்னைக்கு, 400-கோடி ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டார்; கரம் கூப்பினார், கண்ணைப் பிசைந்துகொண்டார், ‘கஷ்டத்தைப் பார்த்துக் கூலிகொடுங்கள் எஜமானே! உங்கள் வாய்க்கு வெற்றிலைபாக்கு, நம்ம வயிற்றுக்குச் சோறு!’ என்று கெஞ்சுவார்களே—அதுபோலெல்லாம் கேட்டுப் பார்த்தார். என்ன நடந்தது என்பதைத் தம்பி நாடறியுமே! கேட்டது 400-கிடைத்தது 170 இந்த இலட்சணத்தில் இருக்கிறது தொடர்பு! காட்டும் வீரம் அத்தனையும், இங்கே, நம்மிடந்தானே! டில்லி சென்றதும், எவ்வளவு அடக்க ஒடுக்கம்! பயபக்தி, ஏ! அப்பா! என்ன சொன்னால், நேருபண்டிதருக்குக் கோபம் வந்து விடுமோ—அதன் பயனாகப் பதவிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற திகில், இவர்களை தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளாக்கி விடுகிறது! இங்கே, பார் வீரதீரத்தை! குட்டுபவனுடைய கரத்தில் மோதிரம் இருந்தால், வலியையும் தாங்கிக்கொண்டு “ஆஹா! அருமையான வைரம்! அற்புதமான பூரிப்பு;”—என்று பாராட்டுகிறார்கள்.
கலைத்துறை, கல்வித்துறை, வணிகத்துறை எனும் பல்வேறு துறைகளிலே நடைபெறும் அநீதிமிக்க போக்கை, தம்பி! நான் அவ்வப்போது விளக்கித் தருகிறேன் இதனைக் கண்ணுறும் காங்கிரஸ் நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ தெரியவில்லை. நாடு, மட்டும் நிச்சயமாக, அறிந்து