227
சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக் கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது ஒரு தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிறநாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா, புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவுள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை ‘தமிழ்நாடு’—நேருபண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் — வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு—எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப்போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது.”
அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது—எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்!
‘தனி நாடு’ என்று கேட்பது தவறு, தீது, தேவையற்றது என்று காரணம் காட்டி, நம்மீது கடிந்துரைக்கும் போக்கினரெல்லாங்கூட, எல்லா அதிகாரங்களும் வசதிகளும், வாய்ப்புகளும் உரிமைகளும் டில்லியில்—மத்திய சர்க்காரில் குவிந்து விட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது தவறு, தீது, தேவையற்றது என்று எடுத்துக் காட்டுகிறார்கள்.
இந்த நிலைமை மாற்றப்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
மாகாணங்களுக்கு—மாநிலங்களுக்கு—இராஜ்யங்களுக்கு இன்று உள்ள அதிகாரங்கள், போதாதன; இந்த அளவுக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்கள் தத்தமது ஆட்சியின் கீழ் உள்ள மக்களின் செல்வ வளர்ச்சிக்கான, நல் வாழ்வுக்கான திட்டங்களை நிறைவேற்றி வைக்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.