பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

நமது அமைச்சரவை!

தம்பி! இதிலே, பாசமும் பரிவும், அன்பும் அக்கரையும், உரிமையும் உறவும் எல்லாம் அந்த நமது என்ற சொல்லுக்குள்ளே வைத்து இழைத்துத் தருகிறார் அந்த ஆசிரியர்! வாழ்க, அவர்தம் தமிழ் உள்ளம்!!

நமது அமைச்சரவை, தமிழ் நாட்டுக்கு
நல்லவரை
திறமைசாலியை
அனுபவமிக்கவரை

கவர்னராக நியமியுங்கள் என்று கேட்கவில்லை.

தமிழ்க் கவர்னரை

நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார்.

இனித் தம்பி, தமிழ் நாட்டின் அவலநிலையைக் காட்டுகிறாரே, அந்தச் சுவையைப் பார்!

தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னரை நியமிக்கும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டுமாம்.

மத்திய அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சேர்க்கப்பட்டிருக்கிறது, என்பது விளங்குகிறது என்பாய். தம்பி! ரசம் அதிலே இல்லை.

மத்திய அரசாங்கம்

என்று மட்டுமே கூற ஆசிரியரின் மனம் இடந்தருகிறது. நமது மத்திய அரசாங்கம் என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது. நமது அமைச்சரவை என்று, உரிமையோடும் பெருமையோடும் கூறுவதற்கு முடிகிறது, மத்திய அரசாங்கம் என்று மட்டுமே, பந்தம் சொந்தம் அற்ற முறையிலே சொல்ல முடிகிறது.

பாவி! நான் மிகப் பாடுபட்டு உள்ளத்து உணர்ச்சிகளை திரைபோட்டு வைக்கிறேன், கிளறிக் கிளறிக் காட்டித் தொலைக்கிறாயே, தேசீய முகாமின் தீப்பொறி கிளம்புமே...என்று ஆசிரியர் ஆயாசப்படக்கூடுமே என்பதுபற்றி, தம்பி, நான் பலமுறை எண்ணிப் பார்த்தேன்; என்ன செய்வது; அவருக்குக் கஷ்ட நஷ்டம் வருவதானாலும், இதனை நான் எடுத்து விளக்குவது தமிழருக்கு இலாபம் அல்லவா!!