பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

அனுப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறதே தவிர, உண்மை வேறு என்றுதான் நான் எண்ணவேண்டி இருக்கிறது.

பட்டீல், கேரளம் அனுப்பப்படுவதற்குக் காரணம், இங்கு அவர் மிக மிக அவசியமாகத் தேவை என்பதாலே அல்ல; பட்டீல் இந்தத் தேர்தலின்போது, பம்பாயில் இருக்க முடியாது என்பதாலே, அவர் கேரளம் அனுப்பப்படுகிறார் என்று எண்ண வேண்டி இருக்கிறது.

‘தேர்தல் வேலை’யிலே இவர் புலி! கல்லிலே நார் உரிப்பார்! காயைக் கனியவைப்பார்! புதுப்புதுப் பிரசார முறைகளைக் கண்டறிவார்! யாராரை எப்படி எப்படி வளைய வைப்பது, எங்கெங்கு எப்படியெப்படி நெளிந்து கொடுப்பது, என்ற வித்தைகளிலே மெத்தச் சமர்த்தர் என்றெல்லாம் கூறப்படுகிறது. இது உண்மை என்று வைத்துக் கொண்டால், தம்பி, இந்த வித்தையை அவர் தமது மாகாணத்தில் செய்து காட்டலாமே! ஏன், இங்கு வருகிறார்? தேர்தல் காலத்தில், பட்டீல் பம்பாய் பகுதியிலே இருப்பது, அவருக்கோ, காங்கிரசுக்கோ நல்லதல்ல! எனவேதான், பட்டீலைப் பிடித்துக் கேரளத்துக்கு அனுப்புகிறார்கள்.

நான் வேண்டுமென்றே கூறுகிறேன் என்று காங்கிரஸ்காரர் யாராவது பேசுவரேல், தம்பி, ஒரு கிழமையாக, பட்டீல் வாழ்கிற பகுதியில், காங்கிரஸ் படுகிற பாடுபற்றிப் பத்திரிகைகளிலே வருகிற செயல்களைப் படித்துக் காட்டு.

படம் தயாரித்துக் கொண்டு, பட்டீல், இங்கு வருவது இருக்கட்டும், இப்போது, அவர் மாகாணத்தில் காங்கிரஸ் பெரிய புள்ளிகள் படுகிறபாடு, படமாக்கப்பட்டால், பாரெல்லாம் பரிகாசம் செய்யும் போலல்லவா இருக்கிறது!!

பம்பாய்—ஆமதாபாத் அமளி அடங்கிவிட்டது என்றும், மக்கள் அறிவு பெற்றுவிட்டனர், காங்கிரஸ் ஆணைக்குக் கட்டுப்பட்டுவிட்டனர் என்றும், இருமொழி ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும், மொரார்ஜி தேசாயைத் திணறவைத்தவர்கள், நேரு பண்டிதரைப் பேசவிடாதபடி செய்தவர்கள், இப்போது வெட்கித் தலைகுனிந்து கிடக்கிறார்கள் என்றும், தேசீய ஏடுகள் மிகத் தந்திரமாகப் பிரசாரம் செய்தன.

சாவன் பம்பாய் மாகாண முதலமைச்சரானார், புதிய சூழ்நிலையே பூத்துவிட்டது, என்று பூரிப்புடன் அந்த ஏடுகள் எழுதின.