பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

237

ததோ அதே முழக்கத்தின் துணையைத்தான் தேடுகிறார்; ஆனால் பாபம், பலிக்கவில்லை! அந்த முழக்கத்தை மிஞ்சும் வேறோர் முழக்கம் எழுகிறது.

மகாகுஜராத் ஜிந்தாபாத்!
சாவன் சர்க்கார் மூர்தாபாத்!

இந்த முழக்கம், கலவரத்துக்கு முன் அறிவிப்பாகிறது!

ஐயோ! கல்! கற்கள்! நாலா பக்கமும்!
தலை ஜாக்ரதை, கண் ஜாக்ரதை!
ஓடிவிடுவோம், ஓடிவிடுவோம்!
பாவிப் பயல்கள்! கொலைகாரப் பயல்கள்!
கூப்பிடு போலீசை, போலீசைக் கூப்பிடு!
ஓடு! ஓடு! பதுங்கிட இடம், தேடு! தேடு!

மக்கள் இவ்விதமெல்லாம் கூவிக்கொண்டு ஓடுவது தெரியுமே, தம்பி, எண்ணத்தேரில் ஏறிச் சென்று பார்த்தால்.

அன்று, பட்டேல் தினம்!

மக்களும், தலைவர்களும், அநேகமாக, அந்த இரும்பு மனிதரை மறந்தேவிட்டார்கள்! மராட்டியத்திலும், குஜராத்திலும் அமளிநிலை இருப்பதைச் சரிப்படுத்த, எந்த ஆமதாபாத் நகரில் அவர் இட்டதுதான் சட்டம் என்ற நிலை இருந்து வந்ததோ அங்கே, படேல் தினம் கொண்டாடினால், மக்கள் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்த பானம் சுவைப்பது போலாகி மாச்சரியத்தை மறப்பர், என்று எண்ணிக்கொண்டனர், மக்கள் இளித்த வாயர் என்ற எண்ணம்கொண்ட இறுமாப்பாளர்.

மகாகுஜராத் இயக்கத்தினருக்கு இந்தச் ‘சூட்சமம்’ புரிந்துவிட்டது; நீங்களென்ன படேல் தினம் கொண்டாடுவது! நாங்கள் நடத்துகிறோம் என்றுகூறி, காங்கிரசார் நடத்துவதற்கு முன்பு, மகாகுஜராத் ஆதரவாளர் சார்பில் கூட்டம் நடத்தினர்.

படேலின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர். ‘பாரதம்’ அவருடைய பணியின் பயனைப் பெற்றதைக் கூறினர்; பலன் பெற்ற கூட்டம் இன்று, தமது இலட்சியத்துக்கு, மகாகுஜராத்துக்கு இழைக்கும் கேடுபற்றிக் கண்டித்தனர்.