பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241

வீச்சு நடத்திப்பார்த்தனர்—பலன் கிட்டவில்லை. இடி முழக்கம் போல,

சவான்! திரும்பிப்போ!
மகா குஜாரத் வேண்டும்!

என்றனர் மக்கள். முதலமைச்சரின் முகம், படமாக்கப் பட்டதோ, என்னவோ! படமாக்கப்பட்டிருந்தாலும், பட்டீல் அதையா காட்டுவார், மக்களிடம்!

‘மாஜி’யையும் சும்மாவிடவில்லை’ இந்த ‘வம்புக்காரர்கள்’.

அவர் இந்தத் தொல்லையே வேண்டாமென்று, பம்பாய்ப் பிரச்சினைக்குத் தலைமுழுக்குப் போட்டுவிட்டு, நேருவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்! போகட்டும் என்று விட்டுவிட்டார்களா?

அவர் ஒரு கூட்டத்தில் பேசினார்—பேச முயன்றார்.

பெருங்கூச்சல் எழுப்பினர், பேசவிடாதபடி தடுத்தனர்.

இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல, என்றார் மொரார்ஜி.

எதற்கும் நாங்கள் அஞ்சுபவர் அல்ல, என்று கூறுவது போல, மக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

மொரார்ஜி, கடுமொழி புகன்று பார்த்தார்—போலீஸ் நடவடிக்கை எடுத்தது—குழப்பமோ நிற்கவில்லை.

இந்த நிகழ்ச்சி, ‘பரோடாவில்’ டிசம்பர் 16-ல் நடைபெற்றது.

தம்பி! குஜராத்திகள் எத்துணை கொந்தளிப்பாக இருக்கிறார்கள்—மொழிப்பற்றும், அதனுடன் தொடர்பாக உள்ள உரிமை குறித்த ஆர்வமும், அந்த மக்களுக்கு ‘எத்தனை தேசியம்’ பேசப்பட்டாலும், ‘பாரதீயம்’ உபதேசிக்கப்பட்டாலும், குலைவதாகவோ, குறைவதாகவோ காணோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

குஜராத்திகள், ‘காங்கிரஸ் வளர’ கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள்.

காந்தி மகாத்மாவை கோயில் கட்டிக் கும்பிடும் போக்கினர்.