பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடிதம்: 80

ஓட்டுச்சாவடி போகுமுன்பு...

பம்பாயில் சவானுக்கு எதிர்ப்பு—
தமிழர் தாழ்ந்த நிலை—வடக்கின் வளர்ச்சி.

தம்பி!

புதுடில்லியிலிருந்து கிளம்பி வந்த மொராஜி தேசாய், பூவிருந்தவல்லியிலே, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார்—ஞாயிறன்று!

இந்தத் திருநாளுக்குத் துணை நின்றனர். ஓ. வி. அழகேசன், போன்றோர்.

உள்ளூர் அமைச்சர்கள் உற்சவத்திலே கலந்து கொண்டனர்.

ஒரே ஒரு குறைதான்; மக்களுக்கு உற்சாகம் எழவில்லை!!

முதல் காரணம், முதன் முதலாக இவர்கள் அழைத்து வந்தது, யாரை, கவனித்தாயா? மலடியைக்கொண்டு, பிள்ளைப் பேறின் சுகவழி பற்றிய போதனை பெறுவது போல, மங்கலநாண் இழந்தவளைக்கொண்டு, கட்டுக் கழுத்தினளுக்கு மங்கள ஸ்நானம் செய்விப்பது என்பார்களே, அதுபோல, பம்பாய் மாநிலத்தில், மக்களின் சீற்றத்தால் தாக்கப்பட்டு, மேற்கொண்டு அங்கே முதலமைச்சராக இருக்கமுடியாத நிலைபெற்று, நேரு பண்டிதருடைய தயவினாலே, டில்லியில் வேலைதேடிக்கொண்டு ஓடிப்போன மொரார்ஜி தேசாயை, அழைத்துவந்தார்கள்!