247
கூட்டம் கூடினால், ‘மாமாங்கக் கூட்டம்’ என்று கேலி பேசுகிறார்களே, இவர்களுடைய நேரு வருகிறபோது, கூடும் கூட்டமும், மாமாங்கந்தானா? அப்போது பார், வாயை! ஜன சமுத்திரம்! மக்கள் வெள்ளம்! இலட்சோப இலட்சம்! என்றெல்லாம் அப்போது பெருமை அடித்துக் கொள்கிறார்களே!!—என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் பேசிக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.
நொந்த உள்ளம் கொண்டோர் தம்பி! பேசுவது, வேகாததைத் தின்றுவிட்டு வேதனைப்படுபவர் எடுத்திடும் ‘வாந்தி’ போலத்தான்- நாற்றமும் குழப்பமும் அவ்வளவு இருக்கும். எனவேதான், “கூட்டம் கூடுகிறதாம் கூட்டம்! என்ன கூட்டம்! மகாமகத்துக்குக்கூடத்தான் கூடுகிறது” என்று பேசினர். போகட்டும், எப்படியோ ஒன்று தம்மை நிந்திப்பதால், நொந்து கிடக்கும் அவர்கள் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி ஏற்படட்டுமே, நமக்கென்ன நஷ்டம்!
மொரார்ஜி, மாகாணப் பிரிவினை உணர்ச்சி—வடக்கு தெற்கு என்ற பேதம் கூடாது, என்று இங்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்-அதே போது பம்பாய் மாகாண முதலமைச்சர் சவான், திணறித் திண்டாடிப் போகிறார். மொரார்ஜி இங்கு தந்த உபதேசம் போலவே சாவன் அங்கு உபதேசம் செய்யப் புறப்பட்டார். மராட்டிய மக்கள் இதற்கு இடந்தரவில்லை!
- சம்யுத்த மராட்டியம் வேண்டும்!
சாவன், திரும்பிப்போ!
என்ற முழக்கம் இடியென்று கிளம்பிற்று!
- இது சரியா?
இது முறையா?
இது தேசீயம் ஆகுமா?
என்றெல்லாம் சாவன், இறைஞ்சுகிறார்-மராட்டிய மக்களோ,
- எமது உரிமையை இழக்கமாட்டோம்!
எமக்கு சம்யுத்த மராட்டியம் வேண்டும்!
என்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.
கருப்புக் கொடிகளைக் காட்டி, ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.