248
முதலமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டமாதலால், போலீஸ் படை வரிசையும் ஏராளம், ஆட்சிக்குத் துதிபாடகர்களாக உள்ளோரும் நிரம்ப! எனினும், உரிமை முழக்கத்தின் முன்பு எந்தச் சக்தியும் நிமிர்ந்து நின்றிட முடியவில்லை! சாவன் பாடு, திண்டாட்டமாகிவிட்டது. போற்றித் திரு அகவல் போதுமானதாகிவிடவில்லை!
இந்த ‘பம்பாய்’ மாநிலத்திலிருந்து வந்த மொரார்ஜி தான் பூவிருந்தவல்லியிலே ‘ஒற்றுமை’- ‘தேசீயம்’ என்பன பற்றித் திருப்பல்லாண்டு பாடி இருக்கிறார்,—ஆங்கிலத்தில்; அதனை அவசரத் தமிழாக்கித் தந்திருக்கிறார், அமைச்சர் பக்தவத்சலனார்.
வடக்கே உள்ள மக்கள் ஏதோ, மாகாணப்பற்று, மொழிப்பற்று, ஏதுமற்று ‘பாரதம்’ என்ற பாசத்துக்கே கட்டுப்பட்டுப் போய்விட்டது போலவும், இங்கே மட்டுமே அதுபோன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருப்பது போலவும், அதுவும் நாம் நடத்துகிற பிரசாரம், விஷமத்தனத்தையும் விபரீதத்தையும் இங்கு மூட்டிவிட்டது போலவும், அந்த நஞ்சு போக மொரார்ஜி போன்றார் வந்து பேசுவது போலவும் ஒரு நாடகம் ஆடப்படுகிறது; தம்பி, உண்மை நிலைமையோ வேறு, அதனை நீயும் அறிவாய், நம் நாட்டிலுள்ள காங்கிரசாரும் அறிவர்.
எந்த மொழிக்காரரும், மாநிலக்காரரும், காங்கிரஸ் என்பதற்காகக் கட்டுப்பட்டு, தமது உரிமைகளை இழந்துவிடத் தயாரில் இல்லை! ‘கண் கண்ட கடவுள்’ என்றும் ‘பார் புகழ் தலைவர்’ என்றும் பிற நேரங்களிலே கொண்டாடும் நேரு பண்டிதராக இருப்பினும், மொழி உரிமை, மாநில உரிமை என்ற பிரச்சினைகள் எழும்போது, பண்டிதரையே பதறி ஓடச் செய்கிறார்கள். காந்தி படமானாலும் நேரு உருவச் சிலையானாலும், கதர்ச் சட்டையானாலும் குல்லாயானாலும், கொளுத்துகிறார்கள், உடைத்துத் தூளாக்குகிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்ச மறுக்கிறார்கள்! இரத்தத்தைச் சந்தனக் குழம்பென எண்ணிக் கொள்ளுகிறார்கள்.
அமைச்சர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்! ஆமதாபாத்தில், அகில உலகப் புகழ் பெற்ற நேரு பண்டிதர், 20-நிமிடம் முயன்று பார்த்தார், கெஞ்சிப் பேசினார், கோபம் மிஞ்சிடப் பேசினார், கதை பேசிப் பார்த்தார், எதுவும் பலன் தரவில்லை!
- எங்கள் உரிமை
எங்கள் குஜராத்!
என்றே எக்காளமிட்டனர்; குஜராத்திகள்!