பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

வெறுக்கத்தக்க பலாத்காரத்தை,
கண்டிக்கத்தக்க காலித்தனத்தை,

புகுத்துகிறார்கள்!

இங்கு, நாம் நமது மாநில உரிமைக்காக, மொழி உரிமைக்காக நடத்துவது இன்னும் கிளர்ச்சி உருவம்கூட எடுக்கவில்லை! நியாயத்தை எடுத்துரைக்கிறோம்; காரணங்களைக் காட்டுகிறோம்; நீதி கோருகிறோம்; இதற்கே, எவ்வளவு இடி, இழிசொல்! எத்துணை அடக்கு முறை; தாக்குதல்!

நேருபண்டிதர் சிலையை உடைக்கும் அளவுக்கு வடக்கே காலித்தனம் நடக்கிறது, அதற்குத் துப்பாக்கி தூக்குகிறது, அங்கு உள்ள துரைத்தனம். இங்கு நாம், பொது மக்களிடம் முறையிட்டுக் கொள்கிறோம், அதற்கே, துப்பாக்கி துரத்துகிறது!

இந்த இலட்சணத்திலே, மொரார்ஜிபாயை அழைத்துக்கொண்டு வருகிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள், நமக்கு ‘தேசீய’ பாடம் போதிக்க! வெட்கம்! வெட்கம்! என்று கூறுவதன்றி, வேறென்ன கூறுவது?

நான் பன்னிப் பன்னிக் கூறி வருகிறேன், ‘இல்லாத ஒன்றை, இயற்கையாக எழாத ஒன்றினை, எத்தனை பெரிய தலைவர்களானாலும், அறிவாளர்களாயினும், ஆற்றலரசர்களாயினும் கூடி முயற்சித்தாலும், புகுத்தி நிலை நிறுத்திவிட முடியாது’ என்பதனை. காங்கிரஸ் நண்பர்கள் ஏதோ ‘தேசீய ஒற்றுமை’ என்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது போலவும், அதனை நாம் பாழாக்குவது போலவும் எண்ணிக்கொண்டு வேதனைப்படுகிறார்கள், வெகுண்டெழுகிறார்களேயன்றி, இயற்கையாக எழ முடியாத ஓர் உணர்ச்சியை இட்டுக்கட்ட முயற்சிப்பது தவறு என்பதை அறிந்து திருந்த அஞ்சுகிறார்கள். தம்பி! வெண்ணெய்ச் சட்டியை வெளியே வைத்திருந்தால் பூனை களவாடித்தின்றுவிடும் என்று பயந்துகொண்டு, வீட்டுக்கரசி, அந்த வெண்ணெய்ச் சட்டியை எடுத்து அடுப்புக்குள்ளே செருகி வைத்தால் என்ன ஆகும்!! ‘தேசீயம்’ பேசுவோர், நம்மீது குறைபட்டுக் கொள்கிறார்களேயன்றி, இந்தப் பேருண்மையை உணர மறுக்கிறார்கள்.

எத்தனை எத்தனையோ நெருக்கடிகள், தாக்குதல்கள், இடிகள், இழி நிலைகள் ஆகியவற்றினுக்குப் பிறகும், தமிழன் என்ற ஓர் உணர்ச்சி இன்றும் மகிழத்தக்க அளவுக்கும், நம்பிக்கை தரத்தக்க வகையிலும், மின்னிக்கொண்டு இருக்கிறது என்றால், தம்பி! இந்த உணர்ச்சியைப் பெற, எத்தனை