பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

251

எத்தனை நூற்றாண்டுகள், எவ்வளவு பெரும் பெரும் அறிவாளர்கள், என்னென்ன வகையினாலே பணியாற்றினர், தெரியுமா! அவ்வளவையும் அரை நூற்றாண்டில் அழித்துவிட முடியும் என்று எண்ணிக் கொண்டனரே, அதிலேதான் தவறு இருக்கிறதே தவிர, நம்மீது என்ன குற்றம்?

‘சிலம்பு ஒலிக்கவில்லை, சிந்தாமணி மின்னிடவில்லை, அகம் இல்லை, புறம் இல்லை, தொல்காப்பியம் ஏதுமில்லை’ எனினும், குஜராத்தி தன் மொழிக்கு ஏற்றமும், உரிய இடமும், தனித்தன்மையும், இவைதமைக் கெடுத்திடாத தனிக் கொற்றமும் தேவை என்று கேட்கலாமாம், கேட்பதுடன் கேடுபல நேரிடுமே என்றுகூட எண்ணிடாமல், அமைச்சர்களை விரட்டலாமாம், அமளி பலவற்றினை மூட்டிவிடலாமாம், இங்கு நாம் மட்டும், அருந்தமிழ் மரபு காத்திட ‘உம்’மென்றாலும் ‘இம்’மென்றாலும் தேசீயம் கெடுமாம், பாரதீயம் பாழ்படுமாம், நாடு நலியுமாம்! என்ன அறிவீனம்!! என்று சீறிக் கேட்பதா? என்னே உமது ஓரவஞ்சனை? என்று, துக்கத்துடன் கேட்பதா? நம்மை எவ்வளவு, ஏதுமறியாதார், இனப்பற்று இல்லாதார், மரபு காத்திடும் வழி அறியாதார், என்று எண்ணிக் கொண்டிருந்தால், மொரார்ஜிகளைக் கொண்டுவந்து இங்கு பேசச் சொல்வார்கள் என்பதை எண்ணிப்பார், தம்பி, எண்ணச் சொல்லிப் பார், காங்கிரஸ் நண்பர்களை.

பூவிருந்தவல்லியிலே மொரார்ஜி வந்து பேசிவிட்டுச் சென்றார்; என் மாநிலத்திலேகூட இந்த அளவுக்கு எனக்கு மதிப்பளிப்பார் இல்லை, இங்கு என் புகழ்க்கொடி சிறப்புறப் பறக்கிறது என்றுகூட மகிழ்ந்திருக்கக்கூடும்; ஆனால் இங்கு அவர்—“தமிழ், என் மொழி! தாய் மொழி! தமிழ் நாடு! தனி நாடு என்றெல்லாம் பேசுவது தீது, தவறு, தேசீயமாகாது” என்றெல்லாம் பேசினாரே, அதுபோல, பக்தவத்சலனாரை குஜராத்திலே சென்று பேசச் சொல்லு, பார்ப்போம்; அழகேசரை ஆமதாபாத் போகச் சொல்லு; காமராஜரை பூனா போய், “மராட்டிய மக்களே! ஏன் உங்கள் மதி இப்படிக் கெட்டுவிட்டது!” என்று கேட்கச் சொல்லு. பட்டாளம் அணிவகுத்து நின்றாலும், இவர்கள் தலைதப்புவது கஷ்டமாகிவிடும்! ஆமாம். தம்பி, அந்த அளவுக்கு அங்கெல்லாம் உரிமை உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிகிறது! இங்குதான், அபிசீனிய மன்னர் வரலாம், அகவல் எதுக்கு, ஆங்கிலப் பாடல் போதாதோ என்று பேசலாம், தலாய்லாமா வரலாம், திருவாசகம் எதுக்கு எமது திருப்பாதம் வீழ்ந்து வணங்கினால் போதாதோ என்று வினவலாம், தாழ்ந்து கிடக்கும் இந்தத்