பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தமிழகத்திலேதான், தருக்கரின் பிடியிலே சிக்கிவிட்ட தமிழகத்திலேதான், உலகின் எந்தக் கோடியிலிருந்தும் எந்த வகையான தலைவரும் வரலாம், தமிழரின் மரபினை இகழலாம், தமிழரைக் கண்டித்துரைக்கலாம்; அதற்கு அவர் தமக்கு மாலையிட்டு மகிழ்விக்க, போற்றிப் புகழ்ந்திட, இங்கு பக்தவத்சலனார் படை வரிசை இருக்கிறது! வேறெங்கும் இந்நிலை வரவிடமாட்டார்கள்! ஏதுமற்ற நிலையைக்கூடப் பொறுத்துக்கொள்வர், எவர் வேண்டுமாயினும் எதைவேண்டுமானாலும் கூறிடும் இழிநிலைக்கு மட்டும் இடமளிக்கமாட்டார்கள்! பிச்சை எடுப்போன்கூடத் தம்பி, இல்லை போ! என்றால் ஏக்கத்துடன் சென்றிடுவான். மச்சு வீடுடையோனாயினும் அவனைப் பார்த்து, “ஏ! பிச்சைக்காரப் பயலே!” என்று பேசினால், எச்சிற் பண்டத்தைப் போட்டு வைத்திருக்கும் குவளையால் அடித்துவிட்டுக் கூறுவான், “மச்சு வீடு என்றுமே உனக்கு நிலை என்ற எண்ணமோ, நானும் எனக்கென்று ஓர் ‘குச்சி’ இருந்து அதிலே வாழ்ந்தவன் தான்! ஏன் உனக்கு இந்த வாய்த்துடுக்கு?” என்று கோபத்துடன் கேட்பான். போலீஸ் சுற்றியபடி இருப்பதால், இன்று மச்சு வீட்டுக்காரனுக்கு இது நேரிடாதிருக்கிறது!! தம்பி! அதனினும் இழிந்த நிலையிலன்றோ நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். சர்க்கசில் காண்கிறோமே, காட்டரசனாம் சிங்கத்தைக் கூட்டிலே நிற்கச் செய்து, அதன் முதுகின்மீது ஆட்டுக்குட்டியைச் ‘சவாரி’ செய்ய வைக்கிறானல்லவா, கரத்திலே துப்பாக்கி வைத்திருக்கும் ‘கரடி’ வித்தைக்காரன்! அதுபோலத்தான் தமிழக நிலைமை இருந்திடக் காண்கிறோம்!! அதுபோன்ற நிலைமை என்றால்கூடப் போதாது; இங்கு ‘ஆடு’ வீரம் பேசிட, அரிமா அடக்க ஒடுக்கமாக அதனைக் கேட்டுத் தீரவேண்டி இருக்கிறது.

மொரார்ஜிகள் பேசும்போது, மரபு மறவாத தமிழர் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற எண்ணம்தானே ஏற்பட்டிருக்கமுடியும்!! தேர்தலுக்கு எப்படி இது பயன்படப் போகிறது!!

‘இந்தியா’ ஒன்று, என்று நமக்காகப் பேசிடும், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கேகூட, குட்டும், குத்தும் வலி தருமளவுக்கு ஏற்படுகிறபோது, என்ன பேசுகிறார்கள் என்பதை நாடு மறந்தா போய்விட்டது! எத்தனை எத்தனை முறை குமுறி இருக்கிறார்கள், இவர்கள் தம் நாத்தழும்பேறப் பேசுகிறார்களே ‘தேசியம்’, அது, அப்போதெல்லாம் ஏன் மறைந்துபடுகிறது?’

டில்லி பாராளுமன்றத்திலேயே டாக்டர் லங்காசுந்தரம் என்பார், “அரசியல் அதிகாரம் அனைத்தும் வடநாட்டி-