பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

257

தாயும் மகனும்

மகன் : எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறாயே, ஏனம்மா?

தாய் : மகனே! என்னடா செய்வது, உன் அப்பாவுக்கு இன்னமும் ஒரு வேலை கிடைக்கவில்லையே! அந்த வேதனைதான்!

மகன் : அப்பா, ஏனம்மா வேலைக்குப் போகாமலிருக்கிறார்?

தாய் : வேலை கிடைக்கவில்லையடா மகனே!

மகன் : போம்மா! அப்பா ஏமாற்றுகிறார்! வேலைதான் நிறைய கிடைக்கிறதாமே!

தாய் : யாரடா அப்பா, சொன்னது?

மகன் : நேற்று, கூட்டத்திலே ஒரு மந்திரி சொன்னார், அம்மா! ஐந்தாண்டுத் திட்டம் போட்டார்களாம்—நாடு சுபிட்சமாகிவிட்டதாம்—வேலை எல்லோருக்கும் கிடைக்கிறதாம்.

தாய் : காங்கிரஸ் கூட்டமாடா மகனே!

மகன் : ஆமம்மா!

தாய் : அங்கு அப்படித்தான் மகனே! பொய்யை மளமளவென்று கொட்டுவார்கள்...சுபிட்சமாகிவிட்டதாமா, நாடு...நம் வீட்டைப் பார்த்தால் தெரியவில்லையா இலட்சணம்! வேலையா கிடைக்கிறது, வேலை! யாருக்கு? இந்தக் காங்கிரசுக்குப் பக்கமேளம் அடிக்கிறவர்களுக்கு வேலை கிடைக்கிறது! அதுவும் என்ன வேலை? இவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்கிற வேலை! வயிற்றெரிச்சலை ஏண்டா மகனே, கிளப்புகிறாய்...

மகன் : ஏம்மா, அப்படியானா, பொய்யா பேசறாங்க...

தாய் : எலக்‌ஷன் வருதடா, மகனே! அதனாலே, மக்களை ஏமாளியாக்கி ஓட்டு வாங்க அதுபோலப் பேசுகிறார்கள்.

மகன் : நான் ஒரு சின்னப் பொய் பேசினா, காதைப் பிடித்துக் கிள்ளி, கன்னத்திலே அறைகிறே...!

தாய் : போடா, குறும்புக்காரா!...

மகன் : காங்கிரஸ்காரர், நாடு சீர்பட்டுவிட்டது, எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டது என்று பொய்யை வாரி வாரி வீசறாங்க...அவங்களை, என்ன செய்தே...?


அ. க. 4—1.