பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தாய் : என்ன செய்தேனா...தேர்தல் வருது...மகனே! அப்போதுதானே, அவங்களுக்குப் புத்தி புகட்ட வேணும்...பார், அப்போது...

மகன் : ஆமாம்மா! பெரிய மனுஷருங்க பொய் பேசுகிற போது, புத்தி சொல்லாமே விட்டுவிட்டா என்னைப்போல சின்னப் பசங்கக்கூடக் கெட்டுப் போயிடுவாங்கம்மா...

தாய் : ஆமாண்டா, மகனே! இப்படிப் பொய்யைப் பேசி ஜனங்களை ஏமாத்துகிற காங்கிரசுக்கு மறுபடியும் ஓட்டுப் போட்டா, நாடே கெட்டுப்போகும். நான் மட்டுமில்லடா, நம்ம பக்கத்து வீட்டு பங்கஜம், எதிர் வீட்டுத் தாத்தா, கோடிவீட்டுக் குப்பி, நம்ம மாமன் வீடு, எல்லோருமே இதே முடிவுக்குத்தான் வந்திருக்கிறோம்...

மகன் : நான்கூட அம்மா, யாராரைப் பார்க்கிறேனோ, அவங்களிடமெல்லாம், இதைத்தான் சொல்லப்போகிறேன்.

தம்பி! எண்ணற்ற இல்லங்களிலே, இதுபோன்ற உரையாடல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.

எது பற்றியும் கவலைகொள்ளாத இல்லங்கள், நம்மால் என்ன ஆகும் என்று எண்ணும் இல்லங்கள், இவைகளில் எல்லாம்கூட, இதுபோன்ற உரையாடல்கள் எழச் செய்யவேண்டிய பொறுப்பு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஓட்டுச் சாவடி போகுமுன்பு, நாட்டு மக்கள், எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்திடக்தக்க முறையிலே, ஏசுவோருக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கே இடமேற்படாத முறையில், இனிய எளிய, பிறரிடம் பகை காட்டாத தன்மையில், தம்பி, நீ அறிந்துள்ள உண்மைகளை, மக்களுக்கு எடுத்துக் கூறு, அதுபோதும்; ராஜாக்களும் கோடீஸ்வரர்களும் முகாமிட்டுள்ள காங்கிரஸ் நம்மை ஒன்றும் செய்துவிடாது! நாட்டு மக்கள், மீண்டும் ஓர் முறை, கேட்டினை மூட்டிவிடும் காங்கிரசைக் கட்டி அணைத்திட மாட்டார்கள்! அவர்கள், பட்டது போதும் என்ற நிலையில் உள்ளனர். ஓட்டுச்சாவடி போகுமுன்பு நாட்டு மக்களிடம் நிலைமையைக் கவனப்படுத்தினால், போதும்; நாம் மகிழத்தக்க பலன், நிச்சயம் கிடைக்கும். தொடர்ந்து பணியாற்று! வெற்றிக்கு வழிகாட்டு!!


30—12—1956.

அன்பன்,
அண்ணாதுரை