28
தேவையைவிட அதிகமாகவே சரக்கு தயாரித்து வைத்தாயிற்று; இன்று ஒரு நாள் வேலை செய்யாததாலே காரியம் குந்தகப்பட்டுவிடாது என்ற தைரியத்தில் கந்தப்பன் இருந்தான். தைலம் வாங்கிவரச் சொல்லி தன் மகள் முத்தம்மாளை அனுப்பிவிட்டு, அம்மா! அப்பா! அம்மம்மா! ஐயயோ...! அட்டடா!—என்று முனகியபடி படுத்துக்கிடந்தான்.
சுளுக்கு, எலும்பு முறிவு ஆகியவைகளுக்குப் பச்சிலைத் தைலம் தடவிக் குணப்படுத்தும் பரம்பரை ராஜ வைத்யர் ராமண்ணா வீட்டில் இல்லை. அன்று செந்திலாண்டவன் கோயிலில் முருகனுக்குச் ‘சந்தனக் காப்பு’ உற்சவம், பிரமாதம், அதைத் தரிசிக்கப்போயிருந்தார் வைத்தியர்.
முருகனுக்குச் சந்தனக் காப்பு உற்சவம் தடபுடலாக நடைபெற்றது.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், கண்டுகளித்தனர்.
மேளம், வாணவேடிக்கை எல்லாம், செலவு பற்றிய கவலையற்ற முறையில், ஏற்பாடாகி இருந்தது.
‘சந்தனக்காப்பு’ சேவை முடிந்ததும், சந்தனம் பக்தர்களுக்குத் தரப்பட்டது—விலைகொடுத்து அல்ல, காணிக்கை செலுத்தி, சந்தனம் பெற்றுக்கொண்டனர்.
அத்தரும் பன்னீரும், அரகஜாவும் பிறவும் கலந்துதான் பார், என் செந்திலாண்டவன்மீது அப்பப்பட்ட சந்தனத்துக்கு உள்ள மணம், இருக்கிறதா என்று பார்! இருக்கவே இருக்காது! சந்தனக் காப்பு முடிந்ததும், தனியாக ஒரு தெய்வீக மணம், சந்தனத்துக்கு ஏற்பட்டுவிடுகிறது! மல்லிகை முல்லை, மருவு மருக்கொழுந்து, ரோஜா மகிழம்பூ, மனோரஞ்சிதம், எனும் புஷ்பங்களிலே எல்லாம் கிடைக்கும் ‘வாசனை’ அவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டது போலிருக்கும். செந்திலாண்டவன் கோயில் சந்தனக்காப்பு உற்சவம் என்றால், தேசமுழுவதும் தெரியும்—என்றெல்லாம் பக்தர்கள் பேசிக்கொண்டனர்.
எலுமிச்சை அளவு, விளாங்காய் அளவு, குண்டுமணி அளவு, உருத்திராட்சைக் கொட்டை அளவு, இப்படிப் பக்தர்கள் அவரவர் செலுத்தும் காணிக்கைக்குத் தக்கபடி, சந்தனப் பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
தெய்வீக மணம் பொருந்தியது என்று நம்பப்பட்ட இந்தச் சந்தனம் முழுவதும், குடிசையிலே குமுறிக்கொண்-