33
இந்திய சர்க்கார், மந்திரிகளின் கௌரவம் உயர்த்தப்படுவதற்கும், மதிப்பு பெருகுவதற்கும் செலவிடும் தொகையையும் வகையையும் கண்டால், சுயராஜ்யத்தின் ‘சுந்தர சொரூபம்’ தெரிகிறது என்று தெந்தினம் பாடிடப் பலர் உளர்.
“கேவலம் கூலிக்காகப் பாடுபடுவதாக எண்ணிக்கொள்ளாதே, இது பகவத் கைங்கரியம், எனவே ‘விசுவாசத்துடன்’ சேவை செய்ய வேண்டும்” என்று கந்தப்பனுக்கு உபதேசிக்கப்படுவது போலவே, “அன்னிய ஆட்சியின்போது, வரி கொடுக்க, உங்கட்கு, மனக்கசப்பும் கொதிப்பும் இருப்பது சகஜம்; இப்போது அப்படி இருக்கக் கூடாது; இது சுயராஜ்யம்; எனவே முகத்தைச் சுளிக்காமல் பாரம் என்று குமுறாமல், முடியவில்லையே என்று கூறிக் கண் கசக்கிக்கொள்ளாமல், கேட்கும் வரிப்பணத்தைக் கொடுக்கவேண்டும்; அதுதான் தர்மம் தேசபக்தி” என்று உபதேசிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், உரத்த குரலில் பேசுகிறார்கள்.
களிமண் தடவினால் வலிபோகுமா, எருக்கம் பாலடித்தால் சுளுக்கு நீங்குமா என்று கந்தப்பன் பரதவிப்பது போலவே, என்னென்ன பாடுபட்டால் பிழைக்கலாம், எந்தெந்தத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளலாம், என்னென்ன துணைத் தொழில்கள் தேடிடலாம், கூடை முடைவோமா, கோழி வளர்ப்போமா, கொல்லன் பட்டரையில் வேலை செய்வோமா, என்ன செய்தால், நமக்கு இன்னும் ஒரு கவளம் கிடைக்கும் என்று ஏக்கத்துடன் எண்ணி எண்ணி, ‘போதாமை’யால் தாக்குண்டு கிடக்கிறான், ஏழை! அவனுக்குப் போதிக்கப்படும் தேசீயமோ, குமுறாமல் கொடு, குறை கூறாமல் கொடு, வரியாகக் கொடு, கடனாகக்கொடு, நகைக்குச் செலவிடாதே, ‘நல்லது பொல்லதுக்கு’ என்று பணத்தை வீணாக்காதே, நாங்கள் அடிக்கடி கடன் கேட்போம், உன் கடமை என்று எண்ணிக்கொண்டு கழுத்துத் தாலியில் உள்ள குண்டுமணிப் பொன்னாக இருந்தாலும், எடுத்துக் கொடு, தேசபக்தன் என்ற கீர்த்தி உனக்குக்கிட்டும்—என்று பிரசாரகர்கள் பேசுகிறார்கள்.
கந்தப்பன், கையைத் தூக்கமுடியவில்லையே, என்று கதறிக் கிடக்கிறான்.
வாழ்வு சுமையாகிவிட்டது, தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள்.
செந்திலாண்டவனுக்குச் சந்தனக் காப்பு உற்சவம் ‘சம்பிரமமாக’ நடைபெறுகிறது; சவுதி அரேபியா சுற்றுப் பயணத்துக்காக நேரு பெருமகனார் தம் ‘ஜமா’வுடன்