பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தயாராகிக்கொண்டிருக்கிறார். அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்து ஒரு திங்கள் ஆகிறது, இதற்குமேல் அவருக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. சவுதி அரேபிய மன்னரின் விருந்தினராகிறார்! அன்றலர்ந்தரோஜா தினமும் விமானமூலம் நேருவுக்குக் கொண்டு வந்து தர ஏற்பாடாம். சவுதி அரேபிய மன்னரின் இரம்மியமான ஒரு அரண்மனையில் நேரு துரை மகனார் தங்கி இருக்க ஏற்பாடு! நேருவுக்குப் பிரியமான உணவு வகைகளைச் சமைத்திட, இங்கிருந்தே திறமையான சமயற்காரர்கள்! சவுதி அரேபிய மன்னர், கோடீஸ்வரர்! அவருடைய விருந்தினராகத் தங்கி இருக்கும் நாட்களில், ரோஜாவின் மணமும் ராஜோபசாரமும், சலாமிட்டு நிற்கும் பணியாட்களின் குழைவும், சர்வதேச நிலைமை பற்றிய பேச்சும், நேருவுக்கு மனச் சந்துஷ்டி அளிக்கும்; மகனைத் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக்கிவிட்டு மாரடித்து அழுதுகொண்டிருக்கும், தாய்மார்களின் கதறல் அல்லவா அவருக்கு இங்கு காது குடையும் அளவுக்குக் கிடைக்கிறது! கண்ணீர்க்குண்டு வீச்சினால் கிளம்பும் புகையும், பிணவாடையும், நாள் தவறாமல் இங்கு! எப்படி நேரு பெருமகனார் இந்தக் ‘கண்றா’விக் காட்சியைக் காண்பது! நிம்மதி இராதே! இதற்கோ அவர் இந்தியாவின் முடிசூடா மன்னரானார்! மோதிலாலின் திருக்குமாரன், தங்கத்தொட்டிலில் தாலாட்டி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளையாமே!

கண்ணே! கண்வளராய்
கட்டிக்கரும்பே! கண்வளராய்

என்று தாலாட்டுப்பாடித் தாதியர் தொட்டிலாட்டியிருப்பர். அப்படி வளர்ந்த ஆனந்த பவனத்தாருக்கு, இங்கு, ஐயோ! அப்பா! அம்மவோ! என்ற அலறலும் கதறலும், எப்படி இனிப்பளிக்கும்? எனவே சவுதி அரேபியா செல்கிறார்! பன்னீரில் குளிக்கலாம், பரிமளகந்தம் பூசலாம், சிரித்திடும் ரோஜாவையும் புன்னகை பூத்திடும் இராஜதந்திரிகளையும் கண்டுகளிக்கலாம். தேன் பாகிலே பதமாக்கப்பட்ட பேரீச்சம்பழமும், கனிச்சாறும் அவருக்கு, மொழி வழி அரசு, எல்லைத் தொல்லை என்பன போன்றவைகளால் ஏற்பட்ட எரிச்சலைப் போக்க உதவக்கூடும்.

மறந்தே போனேனே தம்பி, இந்தியாவின் மதிப்பு உயரும்!!

இதனாலா? இங்கு மக்கள் இல்லாமையில் இடர்ப்பட்டுக்கொண்டு கிடக்கும்போது, இவர் சவுதி அரேபியா சென்று இராஜோபசாரம் பெறுவதாலா இந்தியாவின் மதிப்பு உயரும்? என்று—உனக்குக் கேட்கத் தோன்றும்! அப்படித்தான்