பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

தளிப்பர்! முதலமைச்சர் ஒவ்வொருவருக்கும் விருந்தளிப்பார், ஒவ்வொருவரும் முதலமைச்சருக்கு விருந்தளிப்பர்; எல்லா விருந்துகளிலும் நளினிகளின் நடனம் உண்டு! எல்லாம் கந்தப்பன் அரைத்தெடுத்த கலவைச் சந்தனம் தம்பி, அவன் கைக்கு எருக்கம்பாலடித்து, களிமண் பூச்சுத் தடவிவிடப்பட்டிருக்கிறது!

ஒரே அடியாக உன் அண்ணன், எரிந்து விழுகிறான், நாங்களெல்லாங்கூட வருத்தப்படக்கூடிய விதமாகப் பெரும் பொருள் இப்படிப்பட்ட விருந்து, உபசாரம், உலா, உற்சவம், ஆகியவற்றுக்குச் செலவாகி விரயமாகிறது. ஆனால் எல்லாப் பணமும் இதற்கே பாழாகிவிடுவதுபோல எடுத்துக் கூறுவது, சரியல்ல; வாழ்வும் வளமும் தரத்தக்க எத்துணையோ நல்ல திட்டங்களுக்குப் பணம் செலவிடப்படுகிறது, என்று தம்பி! காங்கிரஸ் நண்பர் கூறக்கூடும்.

அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது என்பதையும், அந்தப் பொல்லாத மனிதர், கவர்னர் குமாரசாமிராஜா சென்ற கிழமை எடுத்துக் காட்டிவிட்டார்.

பிரம்மாண்டமான பணவிரயம்—வீண்செலவு!—என்று குமாரசாமிராஜா கூறுகிறார்.

‘பத்துக்கோடி ரூபாய் செலவில் இங்கு கட்டப்படுகிறது, பவானிசாகர்! மிகப் பிரமாதம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வரும் தாமோதர் திட்டத்தை நான் பார்த்தேன்-அங்கு பிரம்மாண்டமான பண விரயம் நடந்துகொண்டிருக்கிறது’-என்று, சென்ற கிழமை கோவையில் கூறினார்.

அஞ்சா நெஞ்சும், நேர்மைத் திறனும் கொண்டிருந்தாலொழிய, இவ்வளவு வெளிப்படையாக, இந்திய சர்க்காரின் திறமைக் குறைவை, ஊதாரித்தனத்தை, கண்டித்திருக்க முடியாது.

இந்திய சர்க்காரின் நிர்வாகத்தைக் கண்டிப்பது என்றால் நேருவைக் கண்டிப்பது என்று பொருள்! நேருவுக்கோ யாராவது ஒரு சிறுசொல் கூறிவிட்டாலும் கண் சிவந்துவிடும். நேரு புருவத்தை நெரித்தால், எந்தக் காங்கிரஸ் தலைவருக்கும் எதிர்காலம் இருண்டுவிடும்!

இவை தெரிந்தும், உள்ள நிலையை எடுத்துக் கூறத்தான் வேண்டும் என்ற வீரத்தைக் காட்டிய, குமாரசாமிராஜாவைப் பாராட்டாதவர்கள், பண்பற்றோரே!