பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

அவர் பேசுவதிலிருந்து; நான் யூகித்துக்கொள்ள என்ன இருக்கிறது?

கம்யூனிஸ்டு கட்சி கெட்டது.

சோஷலிஸ்டுகள் கெட்டவர்கள்.

முன்னேற்றக் கழகம் மிகமிகக் கெட்ட கட்சி.

இப்படி எல்லாவற்றையும் கண்டித்துவிட்டு, எதை எதிர்க்கட்சி என்று இவர் கூறுகிறார்? ஒரு சமயம், உண்மையான எதிர்க்கட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே, காங்கிரசிலே இருந்தே சிலரை இவர் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பி, எதிர்க் கட்சியாக்கி, அரசியல் ‘சேவை, செய்யப் போகிறாரோ என்னவோ? யார் கண்டார்கள்!’

ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தைக் கண்டிப்பது.

ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது.

ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லலை, அவதியை எடுத்துக் காட்டுவது.

ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும் ஏழைகளை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது.

ஆளும் கட்சி, என்னென்ன விதமான இதமளிக்கும் சட்டம் செய்திருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது. உரிமையையும் உடைமையையும் பறிகொடுக்கும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும்போது, கண்டிப்பது எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவது.

இவைபோன்றவைதாம், எதிர்க்கட்சிகளுக்கு இருக்கவேண்டிய இலட்சணங்கள் என்று நான் படித்த—அதிக அளவு படிக்கவில்லை, ஆனால் படித்தவரையில் கவனத்துடன் படித்திருக்கிறேன்—அரசியல் விளக்க ஏடுகளில் காணப்படுகின்றன.

எதிர்க் கட்சிகளுக்கு இருக்கவேண்டிய இலட்சணங்கள், யாரிடம், எந்த வகையிலே இல்லை என்பதை எடுத்து விளக்கிட இந்த வீராதி வீரர் முன்வரவில்லை—அதை