63
ஏது கூறுவார்! நான் கூறுகிறேன், தம்பி, நாடறிந்த உண்மையை, அதை மறுத்திடவாவது முன்வருகிறாரா, கேள் இந்த மந்திரியை!
அல்லாடி—ஒரு, சர்! ஆங்கில அரசு தந்த பட்டம், அட்வகேட் ஜெனரல் பதவி—ஆங்கில அரசு வீசிய எலும்புத்துண்டு என்றுரைக்கவேண்டும் அமைச்சரின் பாஷையில்! அவரை அல்லவா, அடிபணிந்து அழைத்து, இவர்கள், அரசியல் சட்டம் தீட்டும் வேலையைத் தந்தனர்!
தேசத்துரோகி—இவர் தீண்டக்கூடாது எமது விடுதலைச்சாசனத்தை என்றா கூறினர்.
தேடித் தேடிப் பிடித்திழுத்து வந்தனர், தேசியத் தலைவர்கள், அவர் திருவடி சரணம் என்று கிடந்தனர்.
அமைச்சரின் அறிவாற்றல் என்ன செய்துகொண்டிருந்தது? அல்லாடியை அழைக்காதே! அவமானத்தைத் தேடாதே! என்றா இவர் ஆர்ப்பரித்தார்!
அல்லாடி, அரசியல் சட்டத்தைத் தீட்டிக்கொண்டிருந்தபோது, இந்த அமைச்சர் இருந்த திக்கும் தெரியாது நாட்டு மக்களுக்கு! இன்று இளித்து நிற்கவும், இனிப்பாகப் பேசவும் பதவியின் காரணமாக நாலுபேர் நத்திக்கிடக்கக் கிடைத்துவிட்டார்கள் என்பதனால் உண்டான போதையில், போதகாசிரியராகிறார்—வெள்ளையன் காலத்தில் இந்தக் கழகத்தார் என்ன செய்தார்கள் தெரியுமா என்று விண்ணாரம் பேசுகிறார்.
கலெக்டர் வேலையில் காலடி வைத்து, காஷ்மீர் திவான் வேலை வரையில் உயர்ந்து, உள்ளே நுழையாதே! என்று உத்திரவிட்டு, நேரு பண்டிதரின் மார்புக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டிடும் துணிவுடன் துரைத்தனம் நடத்திய கோபாலசாமி ஐயங்காரல்லவா, மந்திரியானார்! அப்போது. மானமும் ரோஷமும் எங்கேபோய்க் குடிபுகுந்தது? வெள்ளை ஏகாதி பத்யத்தின் செல்லப் பிள்ளையாயிற்றே இந்த கோபாலசாமியார்! இவரைக் காங்கிரசாட்சியிலே காராக்கிரகத்தில் தள்ளுவார்கள், கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுவார்கள், எந்தத் துப்பாக்கி முனையை நேரு பண்டிதரின் மார்பிலே வைத்தாரோ, அதே துப்பாக்கி முனையை இவருடைய முதுகிலே குத்தி விரட்டுவார்கள் என்றெல்லாம் முழக்கமிட்டனரே காங்கிரஸ் பேச்சாளர்கள். வெட்கமின்றி அவரை அழைத்து ‘சோடசோபசாரம்’ நடாத்தி, ‘சுபசோபனம்’ பாடி, பாதுகாப்பு இலாகா, மந்திரியாக்கிக் கொள்கிறோமே, உலகு கைகொட்டிச் சிரிக்காதா, என்று,