64
அன்று எண்ணிய தன்மானத் தலைவர் யார்? காட்டச் சொல்லுங்கள்! இன்று துள்ளி வருகுதுவேல்! தூர விலகி நில்! என்று துந்துபி முழக்கிடும் இந்தத் தூயவராவது, வாய் திறந்தாரோ! இவர் இருப்பதையே நாடு கவனிக்கவில்லை அந்த நாட்களில்!! இன்று, வீரம் சொட்டுகிறது பேச்சில் — அன்று அசடு வழிந்தது இவர் போன்றார் முகத்தில்! ஆங்கில ஆட்சியின்போது எத்துணை ஜொலிப்புடன் இருந்தாரோ, அதே பளபளப்புடன், கொலு வீற்றிருந்தார் கோபாலசாமி ஐயங்கார்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்திடும் வீரப்போருக்கு முத்துராமலிங்கத் தேவர் தேவைப்பட்டார்—இன்று பசும்பொன் இருக்கவேண்டிய இடத்தில், பரங்கியருக்குப் பல்லக்குத் தூக்கிய சிற்றரசர் கூட்டத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் ராஜா அல்லவா வீற்றிருக்கிறார்! வெட்கங்கெட்ட நிலைக்கு, வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்.
தமிழ்நாடு என்ற பெயர் வேண்டும்.
ஏழைகள் ஈடேற்றப்படுவதற்கான திட்டம் வேண்டும்.
ஆட்சியாளர்கள் இதைச் செய்கிறவரையில் உண்ணாவிரதமிருக்கிறேன், என்று சங்கரலிங்க நாடார் எனும் காங்கிரஸ் தியாகி, அல்லற்படுகிறார்; அமைச்சர் அவையில் அமர்ந்துகொண்டு, என்ன ரகளை? என்ன கூச்சல்? என்று கேட்டிட, இராமசாமி படையாச்சியும் மாணிக்கவேலரும் இருக்கிறார்கள். இது வேதனையைக் கிளறவில்லை, வெட்கத்தை மூட்டவில்லை, இந்த அமைச்சருக்கு! நாம் ஒரு காலத்திலே ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தோமாம், ஆகவே நம்மை மக்கள் ஆதரிக்கக் கூடாதாம்!!
யாரார் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்று மக்களால் சுட்டிக் காட்டப்பட முடியுமோ, அவர்களிலே பசை கொண்டோரிடமெல்லாம் நேசம் கொண்டு சுவைத்து, இன்புறுவதுதான் இன்றைய காங்கிரஸ் என்பதை யார்தான் அறிந்து கொள்ளவில்லை! ஊர் முழுவதையுமா ஒரு அமைச்சர் தமது அதிகாரப் பேச்சினாலே உண்மையை மறந்துவிடச் செய்யமுடியும்?
எனவே தம்பி, சொத்தை வாதத்தை மெத்தச் சிரமப்பட்டு, மெச்சுவதற்கு யார் கிடைக்கா விட்டாலும், அடுத்த தோலுக்கு மனு போட்டிருக்கும் மகானுபாவர்களாவது பாராட்டுவர் என்ற எண்ணத்தில் அமைச்சர் பேசுகிறார், அந்தமகானுபாவர்களிலே பலரும், ஜஸ்டிசில் இருந்தவர்கள்!!