பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

நெஞ்சம் இருந்தால்போதும் எதிர்த்து நிற்க. இது நமது இதயத்தை அல்லவா சுட்டெரிக்கும் பெருநெருப்பு—அந்தோ! எத்தனை நாளாக எண்ணி எண்ணித்திட்டமிட்டு, இதயத்தில் இந்தப் பெருநெருப்பை மூட்டினரோ...எத்தகைய இதயம் படைத்த இழிகுண மக்களோ, மனித உருவத்தை எப்படித்தான் பெற்றனரோ, அந்த மாபாவிகள்...எண்ணும்போதே நெஞ்சு வெடித்து ஓராயிரம் சுக்கலாகிவிடும் போலிருக்கிறதே...இப்படியும் ஒரு கொடுமை நடப்பதா...இது போன்றதோர் கொடுமை நடைபெறக்கூடும் என்று எண்ணவே நெஞ்சு நடுக்குறுமே! நடத்தினரே நாசகாலர்கள்! காலம் சுமக்கிறதே அக்கயவர்களை, மண்ணிலே அவர்கள் நிற்க முடிகிறதே! எத்தனை எத்தனை இலட்சம் மக்களின் இதயத்தைப் புண்ணாக்கிவிட்டனர் அந்த இதயமற்ற கொடியவர்கள்...அந்தோ! அந்தோ! அக்ரமமே உருவான அந்த மாபாவிகள் இந்த நம் மண்ணிலே தோன்றினரே! தூத்துக்குடி சாமியை, தமிழ் மாநிலமே! திருஇடமே! பெற்றெடுத்துப் பெருமை பெற்றாய்—எப்படித்தான் இத்தகையோரைப் பெறமுடிந்தது. இதோ தெரிகிறானே அந்த மாவீரன், வடித்தெடுத்த வேல்போல நிற்கிறான், கொள்கைப்பற்று கொழுந்துவிட்டெரியும் கண்களால் பார்க்கிறான், உழைத்து மெருகேறிய உடற்கட்டுடன் நிற்கிறான், உறுதி படைத்த உள்ளம் எனக்கு உண்டு என்று அந்த உருவமே அறிவிக்கிறதே—திருஇடமே! இதோ உன் விடுதலையைத் தன் பேச்சாக மூச்சாகக்கொண்ட செயல் வீரனைக் காண்பாய்! உன் தளை உடைபடும் வரையில் ஓயாது உழைக்கும் நோக்குடன் தன்னைத்தானே உனக்கு அர்ப்பணித்துவிட்ட ஆற்றல் வீரனைக் காண்பாய், மக்கள் பணியன்றி வேறோர் நோக்கமில்லை, கழகத் தொண்டன்றிப் பிரிதொன்றிலே என் எண்ணம் பாய்வதில்லை என்று கூறிப் பணியாற்றி வரும், குன்றெடுக்கும் நெடுந்தோளுடையானைக் காணாய்! எவரிருக்கிறார்கள், பிறந்த நாட்டைப் பீடுடையதாக்கும் பெரும் பணியாற்ற? மக்கள் தொண்டாற்ற யார் இருக்கிறார்கள்? அதற்கேற்ற மனதிடமும் கொள்கைப் பற்றும் குன்றாமல், குறையாமல், குலையாமல் கொண்டோர் யார் இருக்கிறார்கள்? என்று கவலைப்படத் தேவையில்லை, இதோ சாமி, தூத்துக்குடி சாமி, பாண்டி மாநாட்டின் படைத் தளபதி, பாட்டாளிகளின் தோழன், கழகத்தின் காவலன், உண்மை உழைப்பாளர்களின் உற்ற நண்பன், என் தம்பி, என் தம்பி, என்று நான் பெருமையுடன் கூறிக்கூறி, திரு இடமே! உனக்குக் காட்டினேன்! அந்தத் திருவிளக்கு அணைந்துவிட்டதே—எண்ணெய் தீர்ந்தா? அல்லவே! அல்லவே! திரி குறைந்தா? அதுவும் இல்லையே! இருளொழிக்கும் இன்ப ஒளிவிட்டுக் கொண்டிருக்-