83
நாங்கள் யாவரும் கே. வி. கே. சாமிகளாகிறோம், அவர் காட்டிய ஆர்வத்தைக் கொள்கிறோம். அவர்பெற்றிருந்த ஆற்றலைப் பெறுகிறோம். பேயர்களே! எங்களையும் கொலை செய்ய, கத்தி தீட்டுங்கள், அரிவாள் எடுங்கள், வாருங்கள், நாங்கள் சாக அஞ்சும் பரம்பரை அல்ல, என்றெல்லாம் தம்பி, கூறத் தோன்றுகிறது, நா எழமறுக்கிறது, அழுகிறோம், அழுகுரல் கேட்கிறோம், ஆறுதல் பெறமுடியவில்லை. ஆறுதல் அளிக்கச் சக்தி இல்லை. ஒருவரை ஒருவர் காணும்போது கண்ணீரைத்தான் பரிமாறிக்கொள்கிறோம். மறைந்த மாவீரன் குடும்பத்தாருக்கு நாம் என்ன ஆறுதல் கூற முடியும். நாமும் அவர்கள் கூடநின்று கதறித் துடிப்பதன்றி வேறென்ன செய்யும் நிலை இருக்க முடியும். அவர் நமது சாமியாயிற்றே, அழுகிறோம், அழுகிறாய், அழுகிறேன், தம்பி, செய்திகேட்டதிலிருந்து வேதனையால் தாக்கப்பட்டுக் கிடக்கிறேன் — வேறு எதுவும் எழுத முடியவில்லை.
30–9–1956
அன்பன்,
அண்ணாதுரை