கடிதம்: 68
காடு இது–நாடு அல்ல!
இயல்புகள்—சாமிக்குப் பின்
தம்பி!
தூத்துக்குடி சென்றிருந்தேன், துயரக் கடலில் வீழ்ந்து உழலும் நம் தோழர்களைக் கண்டு ஆறுதல்கூற; ஆனால் எனக்கு ஆறுதல் அளியுங்கள் என்றுதான் என்னால் கேட்க முடிந்தது.
சாமியின் திருமணக் கோலத்தைக் கண்டு களித்து, வாழ்வில் எல்லா இன்பமும் எய்தி மகிழ்ந்திடவேண்டும் என்று வாழ்த்துரை வழங்கச் சென்றிருக்கவேண்டிய நான், தம்பி தகுதியும் திறமையும் படைத்தவன், அஞ்சா நெஞ்சன், ஆற்றல் மிக்கோன், ஏழையின் இதயத்தை நன்கு அறிந்தவன், மாளிகையில் மந்தகாச வாழ்வு நடாத்திக்கொண்டு குடிசை வாழ்வோரின் குமுறல் குறித்துப் பேசி உருகிடும் போக்கினன் அல்ல, அவர்களோடு கலந்து உறவாடி அவர்தம் கஷ்ட நஷ்டம் இன்னது என்று கண்டறிந்தவன், பாட்டாளி ஆலையில் வெந்து கருகுவதையும், உழவன் உழைத்து உருக்குலைந்து போவதையும், நடுத்தரக் குடும்பங்கள் வாழ்க்கைத் தொல்லை எனும் சுமையைத் தாங்கமாட்டாமல் வளைந்து போயிருப்பதனையும் கண்டு குமுறும் நெஞ்சினன், இவர்தம் இன்னலைத் துடைத்திடவேண்டும்