பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

என்ற பேரார்வம் கொண்டுமட்டுமல்ல, துடைத்திட இயலும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் உத்தமத்தொண்டன், மேதா விலாசத்தைக் காட்டுவதற்காக ‘மேடை’ ஏறுபவனல்ல, பொதுநலத் தொண்டாற்றவேண்டும் எனும் எண்ணத்துடன் பேசும் போக்கினன், மக்களின் வாழ்வு செம்மை பெற எது செயல்வேண்டும், எங்ஙனம் அதனைச் செயல்வேண்டும் என்ற முறை அறிந்து ஓயாது உழைத்து வருபவன், அத்தகைய சாமி, உங்கள் தொகுதியின் உறுப்பினனாகி, சட்டசபையில் வீற்றிருந்தால், உமக்கு உற்ற குறை எல்லாம் தீரும், நலன் பல வந்து எய்தும் என்று எடுத்துக்கூறி ஆதரவு திரட்டிட தேர்தல் கூட்டத்தில் சென்று பேசிடவேண்டிய நான், காலத்தின் கொடுமையை என்னென்பது, சாமியின் சவக்குழியைக் காணவும், அங்கு நின்று பேசவும், அனுதாபக் கூட்டத்தில் கதறவும் வேண்டியதாயிற்று. என்மீது தீராப்பகை கொண்டோரும், இந்த அளவுக்கு என்னை வாட்டி வதைத்திருக்க முடியாது. சவக்குழியைக் காணச் சென்றேன்—சண்டமாருதம் என்றனர் சாமியின் ஆர்வம் கண்டோர், சளைக்காத உழைப்பாளி என்றனர் அவன் அல்லும் பகலும் அனவரதமும் பாடுபடக் கண்டோர், நகராட்சி மன்றத்திலே உறுப்பினராக அமர்ந்து நற்பணியாற்றி வரும் திறம் கண்டு வியந்து பாராட்டினர், அத்தகைய என் தம்பியின், சவக்குழியைக் காணச்சென்றேன்—கண்ணீரைச் சுமந்துகொண்டு சென்றேன்—வெடித்துவிடும் நிலையிலிருந்த இதயத்தோடு சென்றேன்—எந்த தூத்துக்குடிக்கு நான் சென்றால், அண்ணா! என்று வாய் நிறைய அழைத்து, வாஞ்சனையுடன் பேசி மகிழ்ந்து மகிழச்செய்வானோ, அந்தத் தம்பியின் சவக்குழியைக் காணச்செல்வது என்றால், இதனைவிட எனக்கு நேரிடக்கூடிய கொடுமை வேறு என்னவாக இருக்கமுடியும்? சென்றேன், கண்ணீர் வெள்ளத்தில் உழலும் தோழர்களைக் கண்டேன், கண்ணீர் வடித்தேன், கண்ணீர் வடித்தனர்.

தூத்துக்குடி செல்லும் பாதை நெடுக, நான் பன்முறை சாமியுடன் சென்ற நினைவுகள், அப்போதெல்லாம் கழகம் குறித்து நடத்திய உரையாடல்கள், ஆங்காங்கு உள்ள கழகத்தோழர்களைக் கனிவுடன் சாமி இன்னின்ன காரியத்தை இப்படி இப்படிச் செய்யுங்கள் என்று பணித்திட்ட பாங்கு, ஆகிய நினைவுகள் என் நெஞ்சில் எழும்பின, வாட்டி வதைத்தன. சாமி மறைந்துவிட்டார்—மாவீரன் கொல்லப்பட்டார்—மாபாவிகள் அந்தக் காளையை வெட்டிச் சாய்த்துவிட்டனர்—சாமி இல்லை, சவக்குழியை அல்லவா காணச்செல்கிறோம் என்று எண்ணிய உடனே, நெஞ்சில் பெரு-