பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

நெருப்புத் தோன்றும்—ஆறுதல் பெற எண்ணி இப்பக்கம் திரும்பினால், அழுத கண்களுடன் நடராசன், பிறிதோர் பக்கமோ, மனம் குலைந்த நிலையில் மதுரை முத்து—ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளமுடியாத நிலையில் இருந்தோம். என் செய்வது? நமது கழகம் தோன்றி வளர்ந்து வரும் இந்த எட்டு ஆண்டுகளில், பலப்பல கொடுமைகளுக்கு ஆளானோம்—மனம் பதறப்பதறப் பழி மொழியும் இழி சொல்லும் வீசினர்—எத்தனையோ விதமான தாக்குதல்களை நடத்தினர்—இழப்புகள் பல—இடிகள் ஏராளம்—ஈனத்தனமான செயல் புரிகிறோமே, அடுக்குமா என்ற எண்ணமுமின்றி, பகை கொப்பளிக்கும் உள்ளத்தினர் எதை எதையோ செய்தனர்—நமது தோழர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்—தம்பி!—இவை எதுவும் சாதிக்க முடியாததை, இந்தப் பேரிடி சாதித்துவிட்டது—வேதனை என்றால் எப்படி இருக்கும் என்பதை நமக்குக்காட்டிவிட்டது. யாருடைய திருமணப் பந்தலுக்கும் வெற்றி விழாக் கூட்டத்துக்கும் நான் சென்று களிப்பும் பெருமையும் பெற்றிருக்க வேண்டுமோ, அந்தச் சாமியின் சவக்குழி கண்டேன். தம்பி! தம்பி! என்று பரிவுடன் பாசத்துடன் சொந்தம் கொண்டாடினேன்—என் தம்பி சவக்குழி சென்றுவிட்டான்—தவிக்கிறேன்—தவிப்பு தீரவுமில்லை, குறையவுமில்லை—என்றைக்கேனும் தீருமா என்று ஐயமே கொள்ளவேண்டி இருக்கிறது.

சாமியிடம் சொன்னால் காரியம் முடிந்துவிடும்.

சாமியால் மட்டுமே இந்தக் காரியத்தைச் செய்துமுடிக்க முடியும்.

சாமிக்குத்தான் இந்தக் காரியத்தைச் சாதிக்கும் ஆற்றல் உண்டு.

சாமி சாதித்த வெற்றி இது காணீர்.

சாமியின் திட்டப்படி இந்தக் காரியம் துவக்கப்பட்டது—அதனால் வெற்றி கிட்டிற்று.

இவ்விதம் பேசாதவர் இல்லை—பேசும்போது அலாதியானதோர் மகிழ்ச்சிகொள்ளாதார் இல்லை. வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்று பேசுவர்; பலர் விஷயத்திலே அது ஆர்வத்தினால் பிறந்திடும் அன்புரை என்றோ, வெறும் சொல்லலங்காரம் என்றோ மட்டுமே கூறப்படவேண்டும்—சாமியைப் பொறுத்தமட்டில், அந்தப் பேச்சு முழுக்க முழுக்க உண்மை. ஒவ்வொரு நாளும், நாளில் ஒவ்வொரு மணி நேரமும், தொண்டு — தொண்டன்றி வேறில்லை கழகத்-