பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

என்றால், வேட்டையாடி அவைகளை வீழ்த்திடும் வீரம் உமக்கு எங்கே போயிற்று என்று கேட்பேன், அடக்கு முறைக்கு அவர் பலியானார் என்றால்கூட, சாமியின் உயிர் குடித்த ஆணவ ஆட்சியின் ஆதிக்கத்தை அழித்தொழிப்போம், வாரீர், என்று அழைத்து, சூள் உரைத்திடச் செய்வேன்—சாமி, சாகவில்லையே—கொல்லப்பட்டார்—படுகொலை அல்லவா செய்யப்பட்டார். பெரியதோர் பயங்கரக் கலகமாம், இருதரப்பினரும் ஆயுதம் எடுத்துப் போரிட்டனராம், எதிர்த் தரப்பிலே ஏழெட்டு பிணமாம், சாமியின் இதயத்திலே ஈட்டி பாய்ந்ததாம், சாய்ந்துபட்டாராம் கீழே என்று இருந்தால்கூட, சோகத்துக்கு இடையிலேயே ஒரு பெருமை உணர்ச்சிகூடப் பளிச்சிட்டிருக்கும்—கேட்கவே கூசும், கொடுமையல்லவா நடைபெற்றுவிட்டிருக்கிறது—இரவு மணி பத்தும் ஆகவில்லை—ஊர் உறங்கவில்லை—ஆள் அரவம் அடங்கவில்லை—வீடு செல்கிறார்—வழியில், முட்டுச் சந்தில் அல்ல, காட்டுப் பாதையில் அல்ல, பனைமரச்சாலையில் அல்ல, பயங்கரப்பாதையில் அல்ல, நெடுஞ்சாலையின் நடுவே, எத்தனைபேர் தாக்கினரோ—ஏழெட்டு என்கிறார்கள்—கத்திக்குத்து மட்டும் பதினெட்டாம்—பாதையில் மடக்கிக்கொண்டு, பதைக்கப் பதைக்க வெட்டிக் கொன்றுவிட்டனரே—இதைக் கேட்டு, நெஞ்சம் கொதிப்படைவதன்றி—‘அண்ணா’ என்று அழுகுரலில் என்னை அழைத்த தோழர்களிடம் நான், என்ன சொல்லுவது. பதறாதீர்கள் என்பதா—நானே பதறிப்போயல்லவா இருக்கிறேன். அழாதீர்கள் என்பேனா, நான் அழுதுகொண்டு அல்லவா இருக்கிறேன். நான் அவர்களின் கண்ணீரைக் கண்டேன்—அவர்கள் நான் அழக் கண்டனர்.

சாமியின் இல்லம் சென்றேன்—உள்ளே நுழையும்போதே—இங்குதானே சில திங்களுக்கு முன்பு நம்மை அழைத்துவந்து இருக்கச் செய்து—உபசாரம் நடத்தி—உவகையுடன் உரையாடினார்—என்று எண்ணினேன்—கால்கள் பின்னிக்கொண்டன. உள்ளே படுக்கையில், செயலற்ற நிலையில் அமர்ந்திருந்தார், சாமியின் தந்தை, முதியவர், அவரிடம் சென்றேன்—ஐயோ! தம்பி! நான் எப்படி எடுத்துச் சொல்வேன், அந்த இதயம் வெடிக்கும் காட்சியை.

ஐயா! ஐயா! என் அருமை மகனைக் கொன்றுவிட்டார்களய்யா!

என் மகன் போய்விட்டானய்யா, போய்விட்டான்.