89
ஊருக்கு உழைக்கிறான், உத்தமனென்று பெயரெடுக்கிறான் என்று பூரித்துக் கிடந்தேன்—கொலை செய்துவிட்டார்களய்யா—கொன்று போட்டு விட்டார்களய்யா—என்று கூறிக் கதறினார்—என்னைக் கட்டிப் பிடித்தபடி. தம்பி! அந்த ஒரு கணம் நான் அடைந்த வேதனை, பகைவனுக்கும் வரலாகாது — நிச்சயமாகக் கூடாது.
உன்னிடம்தானே ஒப்படைத்தேன்—உலுத்தனே—எங்கே என் மகன்?—என்று கேட்கிறது, அந்த முதியவரின் கண்ணீர். நான் என்ன பதில் அளிப்பேனடா, தம்பி? என்ன பதில் அளிப்பேன்?
உங்கள் கழகத்தில்தானே என் மகன் ஈடுபட்டு, குடும்பத்தை மறந்து, தொண்டு செய்வதிலே மூழ்கிக்கிடந்தான்—அவன் கொல்லப்படுவதைத் தடுத்திடும் வக்கு அற்றுப் போனீர்களே? நீங்கள் மனிதர்கள்தானா!!!—என்று கேட்கிறது அந்த முதியவரின் கதறலொலி! நான் என்ன பதிலளிப்பேன். மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன். எங்கள் இருவரின் கண்ணீரும் கலந்தன—சூழ நின்றோர் கதறினர்.
“ஐயா! சாமியைப் பறிகொடுத்துவிட்டோம்—கதறுகிறோம்—வேறு என்ன செய்யமுடியும்—ஐயா! சாமி போய்விட்டார்—என்னை உங்கள் ‘சாமி’யாக ஏற்றுக்கொள்ளுங்களய்யா!” என்று கூறிக் கதறினேன்—பெரியவர், ஐயா! ஐயா! என் மகன்! என் மகன்! என்று கதறியவண்ணம் இருந்தார்.
வயோதிகத்தால் இளைத்துக் கிடக்கும் அந்தப் பெரியவரின் மடியிலே, சாமி பெற்றெடுக்கும் செல்வங்களல்லவா தவழ்ந்திருக்க வேண்டும்! அந்தப் பேரப்பிள்ளைகளை வாரி எடுத்து மார்போடு அணைத்து, உச்சி மோந்து முத்தமிட்டு, கண்ணே! மணியே! என்று கொஞ்சிட வேண்டிய அந்த முதியவர், தன் மகன் படுகொலை செய்யப்பட்ட கொடுமையைக் காண்பது என்றால், ஐயய்யோ! அதைவிட இம்சை வேறு என்ன வேண்டும்! இருவரும் சென்றோம், சவக்குழி காண.
உடன்வந்தோர் உருகி அழுதனர்—சுற்றுப்புறமிருந்து வந்திருந்தோர் அனைவரும் பதறி அழுதனர்—நடராசன் தேம்பித் தேம்பி அழுதார்—முத்து சிறிதளவு சமாளிப்பார் என்று எண்ணினேன்—அவரும் கதறுகிறார். என்னுடன் வந்திருந்த நண்பர் பாபுவும், சென்னைத் தோழர் தேவராசன் அவர்களும், கண்ணீர் பொழிந்தனர்.
அ. க. 4 — 6