பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

பச்சிளம் குழந்தை பிணமாகிக் கடலில் மிதந்திடக்காணும் தாய், கதறுவது போலக் கதறுகின்றனர், நமது கழகத்தோழர்கள்.

ஆண்டு எட்டு ஆகிறது நமது கழகத்துக்கு—இந்த அறியாப் பருவத்திலே இப்படிப்பட்ட அக்ரமம், கொடுமை, நமது கழகத்தைத் தாக்கியிருக்கிறது.

தாங்கிக்கொள்ள இயலுமா? இந்தச் சோகத்திலிருந்து, திகைப்பிலிருந்து, நாம் மீளமுடியுமா? அல்லது, திகைப்பு நம்மைச் செயலற்றவர்களாக்கி விடுமா என்றுகூட, சில வேளைகளிலே எண்ணிடத் தோன்றுகிறது.

எத்துணை மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம்—இன்னல் பல வந்துற்றாலும், இழிமொழியாளர் எதிர்த்தாலும், தொல்லை பல துரத்திவந்து தாக்கினாலும், அவைதமை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றுவிட்டோம் என்றெல்லாம் எண்ணி இறுமாந்து கிடந்தோம். இந்தப் ‘பேரிடி’யைத் தாங்கிக்கொள்ள முடிகிறதா, பார்!—என்று காலம் கேட்டுவிட்டதே, என் செய்வோம்?

சாமி, தனி ஆள் அல்ல! தந்தைக்கு மகன் என்பதான நிலையினன் மட்டுமல்ல! நம் கழகத்துச் செல்வன்—நம் குடும்பத்துப்பிள்ளை — நமது இலட்சியத்தின் காவலன். அவனைக் கொன்றதானது நம் ஒவ்வொருவரையும் வாட்டும் கொடுஞ் செயல்.

துரைத்தனத்தின் துப்பாக்கிக்கும், தடியடிக்கும், தூற்றிக்கிடப்போரின் இழிமொழிக்கும் ஈடுகொடுத்துக்கொண்டு, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று இலட்சியம் பேசிக்கொண்டு திரிகிறீர்களே, இதோ உங்கள் சாமியைப் படுகொலை செய்கிறோம், தாங்கிக் கொள்ளுங்கள் பார்க்கலாம் என்று கேட்பது போலல்லவா, இந்தக் கொடுமை நடந்துவிட்டது தம்பி! நாம் என்ன செய்வது?

எனக்கு ஒன்று தோன்றிற்று, தூத்துக்குடியிலிருந்து திரும்புகையில். நாம், வளர வளர, கொடுமை பலப்பல, பல்வேறு வகையில் நம்மைத் தாக்கத்தான் செய்யும் என்று தோன்றிற்று. நாம், மிகச் சாமான்யர்கள்—சிறுவர்கள் என்றுகூடச் சொல்கிறார்கள்—நமக்கு ஏற்பட்டுவிட்ட வளர்ச்சியின் அளவுக்கு வளர்ச்சி காண, அனுபவ மிக்கவர்கள் அரை நூற்றாண்டு பாடுபட்டால்மட்டுமே பெறமுடிகிறது, பிற கட்சிகளால்.