92
கொழுந்துவிட்டெரியும் ஆர்வம் காரணமாகவும், கொள்கைப் பற்றுடன் பணியாற்றும் திறனாலும், கொதிப்பு மூட்டுவோர்பற்றிப் பொருட்படுத்தாது பணியில் ஈடுபடும் பண்பினாலும், நாம், மிக உன்னதமானதோர் வளர்ச்சியைக் கண்டோம். இதுகண்டு பொறாதாரும், இதற்கு நாம் தகுதி அல்ல என்று எண்ணுவோரும், இது நமக்குக் கிட்டாமற் போயிற்றே என்று ஏங்குவோரும் ஏராளமாக உள்ளனர். அவர்களில் பலர் வெளியில் இருந்து நமக்கு வேதனை விளைவிக்கப் பல்வேறு முறைகளில், முனைகின்றனர். உடனிருந்து கொண்டே வேதனை விளைவிக்கவும் சிலர் உளர்போலும். எது எப்படி இருப்பினும், இந்தக் கட்டத்தையும் நாம் கண்டாகவேண்டும்போல் தோன்றுகிறது. ‘பயல்கள் இதனால் மருளட்டும், மனம் உடைந்து போகட்டும்,’ என்று எண்ணுவோரும் இருக்கக்கூடும். இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன் — ஒன்றுதான் எனக்குப்பட்டது—அதைத்தான் தம்பி, உனக்கும் கூறுகிறேன். எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும், எத்தகைய காதகச் செயலுக்குப் பலியாக நேரிடுமோ என்ற நிலைமை இருக்கிறது—அந்த நிலைமையின் ஒரு அறிகுறிதான் சாமி படுகொலைச் சம்பவம்—அந்த நிலைமை நமக்குக் குழப்பத்தையும் கிலியையும் மூட்டுவதாக இருத்தலாகாது—அப்படிப்பட்ட ஆபத்து எந்த நேரத்திலும் நேரிடக்கூடும், ஆகையால், ஒவ்வோர் நாளும், நாளை என்ன ஆகுமோ, இன்றே நாம் நம்மாலான நல்ல தொண்டினைச் செய்துமுடித்துவிடுவோம், என்ற பொறுப்பைத்தான் நமக்கு அளிக்க வேண்டும். அதற்கென்ன பிறகு செய்யலாம்—நாளையத்தினம் பார்த்துக்கொள்வோம்—அவசரம் எதற்கு—என்று நாம், யாரும், காலதாமதம் செய்வதுகூடாது—ஒவ்வோர் நாளும் பணியாற்றும்போது, இதுவே நமது கடைசிநாளாகிவிட்டால் என்ன செய்வது, இன்றே நம்மாலானதைச் செய்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே பணியாற்றவேண்டும். அது ஒன்றுதான், நாம் மேற்கொள்ளவேண்டிய முறை—இப்போதைய சோகச் சம்பவம் நமக்குக் காட்டவேண்டிய பாடம்.
சாமி, சவக்குழியில்; நாம் வெளியில்.
சவக்குழியினின்றும் ஒருவரும் தப்பித்துக்கொள்ளப்போவதில்லை—ஆனால் அங்கு கொண்டுசெல்லப்படுமுன், நமது தொண்டு, பார்த்தோர் பாராட்டத்தக்க விதமான பட்டியல் ஆக இருத்தல் வேண்டுமல்லவா. அதனை மனத்திலிறுத்தி நாம் அனைவரும் நித்தநித்தம் மெத்தவும்