பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

மனவலிவு எத்துணை ஏற்றமுடையதாக இருந்தது என்பதனை எடுத்துக்காட்ட, நக்கீரன் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று அஞ்சாது எடுத்துரைத்த காதையைக் கூறுவது, இப்போது, ஏறத்தாழ மேடை மரபு ஆகிவிட்டது.

தமிழன் எதற்கும் அஞ்சமாட்டான், மனதிற்குச் சரியெனப்பட்டதை, எவர் குறுக்கிட்டாலும், உருட்டி மிரட்டினாலும் எடுத்துரைக்கத் தயங்கமாட்டான், என்பதற்கான எடுத்துக்காட்டாக, நக்கீரன் விளங்குவதுபோல், பிறமொழியாளர்களிடம் காதைகள் உள்ளனவா என்பதுகூட ஐயப்பாடுதான்.

தமிழரின் அஞ்சா நெஞ்சினையும், தயாபரனின் உருட்டல் மிரட்டல் வேலையையும் விளக்கிடப் பயன்படுத்தப்படும் இந்த நக்கீரம், பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா, செயற்கை மணமா என்ற பிரச்சினையை ஒட்டிப் பிறந்தது.

செயற்கையில்தான் மணம் என்பது நக்கீரன் வாதம்.

இல்லை, இயற்கை மணம் உண்டு என்பது இமயவன் இயம்பிய வாதம்.

நக்கீரனுக்கு நெஞ்சில் நடுக்கம் இல்லை—புலமை வலுவளித்தது.

உள்ள படைகள் உருக்குலைந்து ஓடிடக் கண்டான பிறகு மூலப்பலப் படையின் துணையை நாடும் முறைப்படி, சிவனார், புலமைக்கு உரிய வாதங்கள் பயன்படாமற்போன பிறகு, மூலபலம் காட்டும் நோக்குடன், ஏ! ஏடு தூக்கியே! எம்மை யார் என்று காண்பாயாக! என்று எடுத்துக்கூறி, மடக்கிடும் முறையில், நெற்றிக்கண்ணைக் காட்டினார்.

கண்டேன், கண் மூன்றுடையோனே!, கண்டேன்! எனினும் குற்றம் குற்றமே என்று துணிந்துரைத்தார், நக்கீரர் எனும் பெரும் புலவர்.

தமிழர் இதனை மேடைமரபு ஆக்கிக்கொள்ளும் அளவுக்கேனும் ஆர்வம் இழந்திடாமல் உள்ளனரே என்பதிலே மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும்.

எனினும், என் மகிழ்ச்சி ஒன்றுக்குப் பத்தாகி, என் உள்ளத்தில் களிப்புக் கொந்தளிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும் ஓர் நிகழ்ச்சி, சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்றது—பெரும்புலவனாம் நக்கீரன்பற்றி காமராஜர் பேசினார்!