பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

ஆமடா, தம்பி, ஆமாம்! நக்கீரன் பற்றி காமராஜர் பேசினார்!!

தமிழன் இனி தலைநிமிர்ந்து நிற்கலாம், தோள் தட்டி ஆடலாம், பள்ளுப்பாடி மகிழலாம்; காமராஜர், மாநில முதலமைச்சர், சங்கம் புகழ விளங்கிய சான்றோராம் நக்கீரனார் குறித்துப் பேசிடவும், அதனை நாட்டுமக்கள் கேட்டு இன்புறவுமானதோர் நற்காலம் பிறந்துவிட்டதே என்றுகூட ஒருகணம் எண்ணினேன்—மறுகணமோ...!

நக்கீரர்போலக் குற்றம் குற்றமே என்று எடுத்துக்கூறும் பண்பு பாராட்டத்தக்கது, அது வளர வேண்டும் என்று பேசுகிறாரா என்றால், அது தான் இல்லை!

‘உன் புருஷனோடுதான் நீ எப்போதும் சரசமாடுவாயே, இன்று என்னோடு கொஞ்சம் சிரித்துப் பேசேன்’ என்று கேட்கும் பாவனையில், நக்கீரர் குறித்துச் சுட்டிக் காட்டிய காமராஜர், அவர்போல அஞ்சா நெஞ்சுடன், தவறு எத்துணை பெரிய இடத்தவர் செய்தாலும் கலங்காமல், அஞ்சாமல், குற்றம் குற்றமே என்று எடுத்துக் கூறுக என்று பேசாமல், நக்கீரர் பரம்பரை என்று கூறிக்கொள்கிறீர்களே, உங்களுக்கு ஏன் வடநாட்டினிடம் பயம், வடநாடு ஆதிக்கம் செலுத்தும் என்று ஏன் பயப்படுகிறீர்கள்? வடநாடுதான் ஆதிக்கம் செலுத்தட்டுமே? என்று பேசுகிறார்.

இதிலே, அவர் காட்டும் தெளிவு இருக்கிறதே, அதைக்கண்டு அகில உலகும் அதிசயிக்கும்!

முதுகின் மீது யார் ஏறி அழுத்தினாலும், வாய் திறவாமல் இருப்பதுதான் நக்கீரர் பரம்பரையின் போக்காக இருக்கவேண்டும் என்று கருத்துரை அளித்திட, காமராஜரால் தவிர வேறு ஒருவரால் நிச்சயமாக முடியாது! வேறு ஒருவரால் முடியாது.

சிவபெருமான் என்று தெரிந்த பிறகும், நக்கீரர் அஞ்சாமல் தமது எதிர்ப்பை, மறுப்பைத் தெரிவித்தார்.

அதே முறையிலேதான், சுட்டுச் சாம்பலாக்கவல்ல சக்தியைப் பெற்றவர் நேரு பெருமகனார் என்று தெரிந்தும், அந்தச் செயலில், அவருடைய துரைத்தனம் இந்த எட்டாண்டுகளிலே, நிரம்பப் பயிற்சியும் பெற்றுவிட்டது என்பதை அறிந்தும், நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று எடுத்துரைக்கும் துணிவும், தமிழ் மரபு இதுதான் என்பதைக் காட்டிடும் போக்கும், முன்னேற்றக் கழகத்திடம் இருக்கிறது. இதைக் கண்டு பெற வேண்டிய கருத்தைப்