பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

பெறாமல், அப்படிப்பட்ட நக்கீரர் வழி வந்தவர்கள், வடநாட்டுக்குப் பயப்படுவானேன் என்று வக்கணை பேசுவதற்குத் தேவையான சிறுமதியைப் பலர் பெற முயன்றாலும் முடியாது. நமது மாநில முதலமைச்சருடன் இதில் போட்டியிட எவராலும் இயலாது.

எனினும் எனக்கோர் மகிழ்ச்சி—கனியைப் பறித்து குறும்புக்காக மந்தி வீசினாலும், கனி கிடைப்பது நல்லதல்லவா! அதுபோல, தவறாகப் பயன்படுத்துகிறார் என்றபோதிலும், காமராஜர் தமிழகம் தாழ்ந்திடாமல் இருந்த காலத்துச் ‘செய்திகளை’ மேலும் மேலும் தெரிந்துகொள்வது, நல்லது என்று எண்ணவேண்டி இருக்கிறது.

நக்கீரர், நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறியதும், என்னே இவர்தம் அஞ்சாமை! என்று வியந்து வெண்மதி சூடியோன், அவரை வாழ்த்தினன் என்று கதை இல்லை. வெந்தழல் நக்கீரர் உடலைப் பற்றிக் கொண்டதன்னதோர் நிலையை மூட்டிவிட்டார் என்றும், பின்னர் அப்பெரும் புலவர் திருமுருகாற்றுப்படை பாடி உய்வு பெற்றார் என்றும்தான் திருவிளையாடல் குறித்து உரைக்கின்றனர்.

எனவே, நக்கீரர் காலத்திலும் சரி அஞ்சா நெஞ்சனைப் போற்றிட ஒரு சிலரே உளர் என்று கூறத்தக்க இக்காலத்திலும் சரி, நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறும் போக்கினை, மேலிடத்தில் அமர்ந்தவர்கள் பாராட்டுவது கிடையாது—பகைதான் பெரு நெருப்பாகும்.

நக்கீரர் கதியே இதுவாயிற்று—உண்மையைச் சொன்னதற்காக உழல நேரிட்டது, அதுவும் உமாநாதனின் உக்கிரத்தினால் என்று கண்ட பிற்காலத் தமிழர்கள், ஒற்றைக் கண்ணனாக இருந்தாலும்கூட அவன் ஊராளும் நிலைபெற்றான் என்றால், அடங்கவும் ஒடுங்கவும், ஆமையாகவும் ஊமையாகவும் தாழ்ந்து போயினர். எனவே, எதைச் சொன்னாலும் சரி என்று ஏற்றுக்கொள்ளும் பாவனைப் பணிவும், கோழை உள்ளமும் ஏற்பட்டுவிட்டது; அதன் விளைவாகவே இங்கு ஆரியம் நுழையவும், பிறகு ஆங்கிலேயர் அரசாளவும் இன்று வடவர் கொட்டமடிக்கவுமான கோணல் நிலை ஏற்பட்டது; இதை நாட்டுமக்களுக்கு எடுத்துக் கூறிடும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்; காமராஜரோ, நாவடங்கிக் கிடவுங்கள் என்று புத்தி கூற, நக்கீரர் கதையையே பயன்படுத்தப் பார்க்கிறார்.