இயல் நான்கு
புஷ்பங்கள்
44. இந்த உலகத்தையும், தேவர்களுடைய எமலோகத்தையும் வெற்றி கொள்பவர் யார்? (பூந்தோட்டத்திலே) பழக்கமுள்ளவன் நல்ல மலர்களைக் கண்டுபிடிப்பதுபோல், தெளிவாக விளக்கியுள்ள தரும மார்க்கத்தைக் கண்டு பிடிப்பவர் யார்? (1)
45. இந்த உலகத்தையும், தேவர்களுடைய எமலோகத்தையும் பயிற்சியுள்ள சீடன்[1] வெற்றி கொள்வான். பழக்கமுள்ளவன் நல்ல மலர்களைக் கண்டு பிடிப்பது போல், தெளிவாக விளக்கியுள்ள தரும மார்க்கத்தைப் பயிற்சியுள்ள சீடன் கண்டு பிடிப்பான். (2)
46. நீரில் குமிழி போலவும், கானல் நீர் போலவும் உள்ள இந்த உடலின் தன்மையை உணர்ந்து கொண்டு, அவன் மாரனின் மலர் அம்புகளை அழித்து விட்டு, எமராஜனின் கண்ணுக்குப் புலனாகாத இடத்திற்குப் போய்விடுவான். (3)
47. உறக்கத்தில் ஆழ்ந்துள்ள கிராமத்தைப் பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போகிறது; அது போல் மனிதன் (வாழ்க்கையில் இன்பங்களாகிய) மலர்களைப் பறித்துக் கொண்டு அதிலே ஈடுபட்டிருக்கும் போதே மரணம் அவனை அடித்துக் கொண்டு போய்விடுகிறது. (4)
- ↑ பௌத்த தருமத்தில் பயிற்சி பெறும் சீடர்களின் தகுதிக்குத் தக்க நான்கு படிகள் உண்டு. முதற்படியிலுள்ளவன் சரோதபன்னன்; இரண்டாம் படியிலுள்ளவன் ஸக்ருரதகாமி; மூன்றாம் படியிலுள்ளவன் அநாகாமி; நான்காம் படியிலுள்ளவன் அருகத்து. இங்கு சீடன் என்றது கடைசியிலுள்ள அருகத்துப் படியை அடைந்தவனைக் குறிக்கும். அருகத்து ஜீவன் முக்தனுக்கு நிகரானவன்.