பக்கம்:தம்ம பதம்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் ஏழு

முனிவர்

90.(ஸம்ஸார) யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்கள் அனைத்தையும் அறுத்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்குத் துன்பம் என்பதில்லை. (1)

91.கருத்துடையவர்கள் இடைவிடாத முயற்சியுடையவர்கள். அவர்கள் ஒரேயிடத்தில் ஓய்ந்து கிடப்பதில்லை! நீர் நிலையை விட்டுப் பறந்து செல்லும் அன்னங்களைப் போல், அவர்கள் இல்வாழ்வை விட்டுப் போகின்றனர். (2)

92. வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக் காண முடியாது; அதுபோல் சேமித்து வைத்த செல்வங்கள் இல்லாமல், அறிவுக்குப் பொருத்தமான ஆகாரம் அருந்தி, பந்தங்களற்ற பரிபூர்ண விடுதலையான நிருவாணம் ஒன்றையே இலட்சியமாய்க் கொண்டவர்களுடைய வழியைப் புரிந்து கொள்ளுவதும் அரிதாகும். (8)

93. வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக் காண முடியாது; அதுபோல், ஆஸவங்களை [1]அவித்துப் பந்தங்களற்ற பரிபூர்ண விடுதலையான நிருவானத்திலேயே நாட்டமுள்ளவருடைய வழியைப் புரிந்து கொள்ளுவதும் அரிதாகும். (4)


  1. ஆஸ்வங்கள் நான்கு: காமாஸவம், பாவாஸவம், திட்டாஸவம், அவிஜ்ஜாஸவம். காமாஸ்வம்-சிற்றின்பத்தேட்டம்; பாவாஸவம்-பிறப்புக்குக் காரணமான உயிராசை; திட்டாஸவம்-கற்பனையான பொய்க் காட்சி;. அவிஜ்ஜாஸவம்-அறியாமை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/32&oldid=1381800" இலிருந்து மீள்விக்கப்பட்டது