பக்கம்:தம்ம பதம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் ஒன்பது

தீயொழுக்கம்

114. நல்லதை விரைவாக நாடவேண்டும்; பாவத்திலிருந்து சித்தத்தை விலக்கவேண்டும். புண்ணிய கருமத்தைச் செய்வதில் தாமதித்தால், மனம் பாவத்தில் திளைக்க ஆரம்பித்து விடும். (1)


115. மனிதன் பாவத்தைச் செய்துவிட்டால், அதையே திரும்பத் திரும்பச் செய்யாதிருப்பானாக. அவன் அதில் திளைத்திருக்க வேண்டாம்; பாவ மூட்டை மிகவும் துக்ககரமானது. (2)


116. மனிதன் புண்ணியத்தைச் செய்வானாக. அவன் அதில் திளைத்திருக்கட்டும். புண்ணிய மூட்டை மிகவும் இன்பகரமானது. (3)


117. பாவம் பயனளிக்க ஆரம்பிக்காதவரை இன்பமாய்த்தான் தோன்றும்; ஆனால் பயனைக் கொடுக்கும் போது, பாவி தன் பாவத்தை உணர்கிறான். (4)


118. நல்லவனும் தன் புண்ணியம் பயனளிக்க ஆரம்பிக்காதவரை துன்பத்தையே காண்கிறான். ஆனால் பயனைக் கொடுக்கும்போது, அவன் நன்மையையே உணர்கிறான். (5)


119, ‘என் பக்கம் அண்டாது' என்று பாவத்தைச் இலேசாக எண்ணவேண்டாம். துளித்துளியாக விழும் தண்ணீராலேயே குடம் நிரம்பிவிடும். பேதை கொஞ்சம் கொஞ்சமாகப் பாவத்தைச் சேர்த்தாலும், அவன் பாவத்தால் நிரம்பி விடுகிறான். (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/37&oldid=1381807" இருந்து மீள்விக்கப்பட்டது