பக்கம்:தம்ம பதம்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் பன்னிரண்டு

ஆன்மா

155. ஒருவன் தன்னைத்தான் நேசிப்பானாகில், அவன் தன்னையே கவனமாய்க் காத்துவரவேண்டும். இரவில் மூன்று யாமங்களில் ஒன்றிலாயினும் ஞானி விழிப்புடன் கவனமாயிருப்பானாக. (1)

156. ஒவ்வொரு மனிதனும் முதலில் தான் நன்னெறியில் நிலைபெறவேண்டும்; பிறகுதான் மற்றவர்களுக்குப் போதிக்கவேண்டும். இத்தகைய ஞானி கிலேசமடைவதில்லை. (2)

157. மற்றவர்களுக்குப் போதிக்கிறபடி ஒருவன் தன்னைப் பண்படுத்திக் கொள்ளட்டும். தன்னை நன்கு அடக்கி யாண்ட பிறகு, பிறரை அடக்கியாள முடியும். ஏனெனில் தன்னை அடக்கிக் கொள்வதே கடினமான காரியம். (3)

158. ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனாயிருக்க முடியும்? தன்னை நன்கு அடக்கி வைத்துக் கொண்டால், ஒருவன் பெறுதற்கரிய தலைவனைப் பெற்றவனாவான். (4)

159. மூடனுடைய பாவம் அவனிடமே பிறந்தது, அவனே படைத்தது. வயிரம் மற்ற மணிகளை அறுப்பதுபோல், அவன் செய்த பாவமே அவனை அழித்து விடும். (5)

160. மாலுவக் கொடி கடம்பமரத்தைச்சுற்றிப் படர்ந்து மரத்தையே அமுக்கி விடுவதுபோல், ஒருவனுடைய தீவினையே அவனை அமுக்கிவிடுகிறது; பகைவர் செய்ய விரும்பும் தீமையை அவன் தானாகவே செய்து கொள்கிறான். (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/45&oldid=1381840" இலிருந்து மீள்விக்கப்பட்டது