பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100


61. மடி இன்மை
(சோம்பல் இன்மை)

ஊக்கம் இருக்கலாம்; அஃது உள்ளத்தைப் பொறுத்தது. செயல் வேறு; அதில் சோம்பல் காட்டினால் அவ்வளவு தான்; அவன் தானும் உயர முடியாது; தன் குடும்பத்தையும் உயர்த்த முடியாது.

ஒரு காரியத்தை விரைவில் முடிக்க வேண்டும்; அதனை நீட்டித்துக்கொண்டே போவதும் குறைபாடுதான். மறதி, சோம்பல், தூக்கம் இவையும் வெற்றிக்குத் தடைகள் ஆகும்.

செல்வாக்கு மிக்கவராக இருந்தும் செயல்திறன் அற்றுச் சோம்பிக் கிடந்தால் யாரும் வந்து உதவ முடியாது. உன் சொந்த முயற்சி இருந்தால்தான் பெரியவர்களின் செல்வாக்கும் உதவியும் பயன்படும். அரசனே உனக்கு வேண்டியவனாக இருந்தாலும் நீ எதனையும் சாதித்துக் கொள்ள முடியாது.

சோம்பிக் கிடப்பவனைப் பார்த்து மற்றவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்; இடித்துக் கூறி இகழ்ந்து பேசுவர் “ஏண்டா, இப்படி உட்கார்ந்திருந்தால் எப்படி? சோம்பேறியாக இருக்கிறாயே இது தகாது” என்று அறிவுரை கூறிக் கொண்டே இருப்பர்.

சோம்பல் மிகவும் கெடுதி; உழைக்கும் கரங்கள் சோம்பல் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டால் பிழைக்கும் வழிகள் அடைபட்டுவிடும்; உயர்குடியில் பிறந்தவராயினும் யாரும் வந்து உதவமாட்டார்கள். அவன் பகைவர்களுக்குப் பணிந்து அவர்களுக்கு அடிமையாகிவிட வேண்டியதுதான்.