பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௬௮

முன்னுரை 


தொடர்புடைய ஆடவன் ஒருவனை இவர் ‘பரத்த(ன்)’ என்று ஓரிடத்தில்(1311) குறிப்பிடுவதும் கருதத்தக்கதாகும். அத்துடன், இந்தச் சொல், கழக இலக்கியங்களுள் அகம்: 145-9 என்னும் ஓரிடத்திலேயே பயன்படுத்தப் பெற்றுள்ளதும் எண்ணத்தக்கது.

இவ்வாறான காரணங்களால் திருக்குறளில் இதன் ஆசிரியர் பெண்மைக்குத் தரும் சிறப்பும், பெருமையும் நன்கு புலப்படுகின்றனவல்லவா? இதுவும் அவரின் பொதுமை கருதும் நல்லுணர்வுக்கும், அறநோக்கிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும் எண்க.

இனி, உடைமைகள் தொடர்பாகவும் நூலாசிரியர், அன்றைய சிந்தனையாளர்கள், பொதுநலப் புலவர்கள் யாவரினும் மேம்பட்டுத் திகழ்வதையும் நாம் நன்கு கவனித்தல் வேண்டும்.

முதற்கண், திருவள்ளுவர் ஒருவகைத் தன்மானப் புலவராகத் தென்படுவதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அவர் காலத்திலும் சரி, அவர்க்கு முன் பின் காலத்திலும் சரி, அவரையொத்த தனித்தன்மையும், பிறர் எவர்க்கும் தம்மைச் சார்புபடுத்திக் கொள்ளாதவாறு, செல்வரையோ, திலக்கிழார்களையோ (அக்காலத்து வேளிர்கள்), சிற்றரசர்களையோ அண்மி, அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்து வாழாத செம்மாப்பும் பெருமிதமும் கொண்டவர் ஒருவரும் புலவர் மரபில் இலர் என்றே சொல்லிவிடலாம். அவர் காலத்தும் அவர்க்கு முந்தியும் பிந்தியுமாக மூன்று கழகக் காலத்திலும் அவற்றை ஒட்டியும் ஏறத்தாழ ஐயாயிரம் புலவர்கள் வாழ்ந்திருந்தனராகக் கூறப்பெறுகிறது. பெரும்பாலும் அவர்கள் அனைவருமே எவரையோ அஃதாவது வள்ளல் ஒருவரையோ, செல்வரையோ, சிற்றரசரையோ சார்ந்தோ அல்லது அவர்கள் பால் அடிக்கடி சென்று அவர்களைப் பாடிப் பொருள் பெற்று வந்தோதாம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளதாகக் கழக இலக்கியங்கள் முழுவதிலுமாகக் காணவேண்டி உள்ளது.

புலவர்கள், பெரும்பாலும் பழுமரம் நாடும் பறவைகளைப் போன்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். பொருளுக்காகத் தமிழ் பாடும் தகையோர்கள், புலமைமுயற்சியில் பொருள்முயற்சி குன்றுவதால், அவர்கள் என்றும் ஏழ்மைப்பட்டே இருப்பவர்கள். அதனால் அவர்கள் செல்வர்களையோ வள்ளல்களையோ, அரசர்களையோ நாடிப்போய், அவர்களிடம் பாடிப் பரிசில் பெற்று வாழும் பான்மையுடையவர்கள். கால இடவேறுபாடின்றி இந்நிலை என்றுமே தொடர்ந்து வருவது. இன்று வரையிலும்கூட அத்தன்மை மாறுபடாததாகவே தென்படுகின்றது. இன்னும் சொல்வதானால், இதில் தமிழ்ப்புலவர்கள் மட்டுமே யன்றி, வேற்றுமொழி, அல்லது வேற்றுநாட்டுப் புலவர்களும்கூட நெறி விலக்குடையவர்களாகத் தெரியவில்லை. எனவே, இந்நிலை அற்றைத் தமிழ்ப் புலவர்களிடம் குறிப்பாகத் திருவள்ளுவர் காலப் புலவர்களிடம் இயல்பாகவே இருந்தது.