பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௧௯


- புறம் 221: 1. இனி, பிற நூல்களுள் அவைபற்றிய ஒரிரு குறிப்புகள்:

'ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்'

-பழமொழி: 55.

'செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம்
பெருமான் முகம்பார்த்த பின்னர் - ஒருநாளும்
பூதலத்தோர் தம்மைப் பொருள் நசையால் பாராவாம்
காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்'

- தண்டி சூ. 2. உரை. மேற்.

- ஆக, இதுவரை அக்காலப் புலவர்கள் அனைவரும் மேற்காட்டிய பாடற் சான்றுகள்வழி, எவரோ ஒரு வள்ளலர், செல்வர், நிலக்கிழார், வேளிர், சிற்றரசர், பேரரசர் ஆகியோர்களைச் சார்ந்தோ அண்டியோ, அவர்களைப் பலவாற்றானும், அவர்கள் மகிழுற வேண்டிப் பாடிப் புகழ்ந்தோ பராவியோ, தம் வறுமை நிலைகளையும் ஏழ்மைக் கொடுமைகளையும் போக்கிக்கொண்டவகையிலேயே, தம் தம் புலமைத் திறன்களையும் கற்பனையாற்றல்களையும் வெளிப்படுத்தியுள்ளதை நன்கு உணரலாம்.

ஆனால், அவர்கள் போல் அல்லாமல் நம் திருவள்ளுவப் பெருந்தகையோ, இவ்வாறு, இன்னன்னோர்களை நெருங்கித் தம் புலமைத் திறத்தை அவ்வவர்பொருட்டு வீணே இழக்காமல், தன்மானத்தொடு தம் சிந்தனையாற்றல், புலமையாற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி, அவற்றை இவ்வுலக நன்மைக்காகவும், மக்கள் நலத்துக்காகவும், பொதுமை அறம் கருதி, இவ்வுலகத்து எக்காலத்தும் எவ்விடத்தும் பயன்படுமாறு செய்த பெருந்தகைமையை என்னென்று கூறி, மகிழ்வது? அது, பெரிதும் வியந்து பாராட்டக் கூடியதன்றோ?

இனி, அவர் வாழ்வில், அவரும் ஏலேல சிங்கன் என்னும் கப்பல் வணிகர் ஒருவரால் புரக்கப்பெற்றார் என்பதும், அவர் மகளாகிய வாசுகி என்னும் பெண்ணியல் நல்லாளை மணந்துகொண்டு இல்லறம் மேற்கொண்டு ஒழுகினார் என்பதும் எந்த அடிப்படைச் சான்றும் அற்ற கட்டுக்கதைகளே என்க.

அம் மெய்ப்பொருள் பேராசிரியர் இல்லறம் மேற்கொண்டு வாழ்ந்திருக்கலாம் என்பதும், அவர்க்கு மக்கட்டேறு இருந்திருக்கலாம் என்பதும் அவர் நூலுள் ஆங்காங்குப் படுத்தியுள்ள அகப் புறவுணர்வுகள்