பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௨௪

முன்னுரை 


2) அக்கால், நூலாசிரியர் தோன்றி வளர்ந்துள்ள மக்கள் இனப் பகுதிக்கு ஏற்பட்ட அகப்புறத்தாக்கங்களும் அவற்றின் வலிவு மெலிவுகளும்;
3) இவ்வகையில் நூலாசிரியர்க்கு உற்ற அறிவுநிலை, மனவுணர்வுநிலை, வாழ்வியல் நிலை - இவற்றுள் ஏற்பட்ட வளர்ச்சியும்பட்டறிவும்;
4) இயற்கையாக அவர்க்குள்ள கற்பனை வளம், மொழிப்பயிற்சி, சிந்தனையாற்றல், மாந்தவியல் நேயம், உலகவியல் நோக்கு முதலியவை.

இவ்வகையில் திருக்குறள் தோன்றியதற்கும் இக்காரணங்கள் தலையாயவையாக இருந்திருக்கின்றன. அவர் வாழ்ந்திருந்த காலம் தமிழகத்துள் ஆரியவினம் புகுந்து, வாழ்வியல் நிலை, கலை, பண்பாட்டு நிலைகள், அரசியல்நிலை, மொழிநிலை முதலியவற்றுள் பற்பல கோணங்களிலும் பலவாறான அகப்புறத் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலம். அஃது ஏறத்தாழ கி. மு. 3 - ஆம் நூற்றாண்டு போல் என்க.

"கி. மு. 3 -ஆம்நூற்றாண்டை ஒட்டியே, இந்தியாவின் தென்கோடி வரையிலும் ஆரியப் பண்பாடு அமைதி வழியில் ஓரளவில் பரவியிருந்தது என்று கூறுதற்குச் சான்றுகள் உண்டு. ஆரியவினம் தங்களின் செயற்கை மொழியாகிய சமசுக்கிருதம், வேதவியல் கருத்துகள், வர்ணாச்ரம தர்மவியல் கோட்பாடுகள், புராண, இதிகாசக் கதைகள், சடங்குகள், வேள்விகள் முதலியவற்றை மெது மெதுவாக, படிப்படியாக, ஆனால் பரவலாக, (இக்கால் வடநாட்டு வல்லாண்மையர் இந்திமொழியையும், பிற வடவர் கலை, பண்பியல்களையும் புகுத்துவது போலவே) தமிழர்களிடையே புகுத்தி வந்தனர். இவற்றுக்கு அற்றைத் தமிழ அரசர்களும் ஆதரவும் புகலிடமும் வலிவும் தந்தனர்”

(The Civilized Demons-The Harappans in Rigveda-By Malatij. Shendge (1977)

இவ் விரும்பத்தகாத சூழ்நிலைகளால், தமிழ் இனத்தவரிடையே படிப்படியான சில மனமாற்றங்களும், நடைமுறைப் பழக்க வழக்க வேறுபாடுகளும், வரணப் பூசல்களும் மூடநம்பிக்கைகளும் வேரூன்றி வளர்ந்துவந்தன. அவை திருவள்ளுவர் காலத்தில், வழிவழியாக வந்த தமிழியல் மரபுகளையும், வாழ்வியல் கோட்பாடுகளையும், மெய்யியல் கொள்கைகளையும், இல்லற நெறிமுறைகளையும், குமுகவியல் பண்பாடுகளையும், அறவியல் கூறுகளையும், அரசியல், பொருளியல் நாகரிகங்களையும் திசைவுறச் செய்து, தமிழியலுக்கும், புதுவதாகப் பரவிய ஆரியவியலுக்கும் எளிதில் வேறுபாடுகள் தெரியா வண்ணம் தமிழர்களை நிலைகுலையச் செய்தன.